Published : 21 Mar 2022 06:17 AM
Last Updated : 21 Mar 2022 06:17 AM

வால்பாறை சாலையில் குரங்குகளுக்கு உணவு வழங்கக்கூடாது: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

பொள்ளாச்சி

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உலா வரும் வன விலங்குகளுக்கு, சுற்றுலா பயணிகள் உணவு வழங்கக்கூடாது என்று, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் வரையாடு, குரங்குகள், சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள், பகல் நேரங்களில் அதிக அளவில் உலா வருகின்றன. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் சாலையோரம் நடமாடும் குரங்குகளுக்கு சிப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்குகின்றனர். இதனால், குரங்குகளின் உணவுப் பழக்கம் மாறி வருவதாக, வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "வால்பாறையில் இருந்து அட்டகட்டி வழியாக பொள்ளாச்சி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் செல்லும்போது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி, வன விலங்குகளுக்கு உணவு வழங்குகின்றனர். குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் சுற்றுலா பயணிகள் வழங்கும் உணவுக்காக, சாலையின் குறுக்கே விரைந்து வரும் குரங்குகள் பிற வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. எனவே, குரங்குகளுக்கு உணவு வழங்குவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும். மீறினால், வன உயிரினப் பாதுகாப்பு சட்டப்படி, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x