Published : 19 Mar 2022 04:30 AM
Last Updated : 19 Mar 2022 04:30 AM
தக்காளி, வெங்காயத்தைத் தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. அடுத்தடுத்து காய்கறிகள் விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் விவசாயிகள் இழப்பைச் சந்திப்பதால் கவலையடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரி, வெண்டை எனப் பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். இவற்றில் 60 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மீதமுள்ளவை தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஒரு கிலா ரூ.50-க்கு மேல் விற்பைனையான தக்காளி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. மொத்த மார்க்கெட்டில் ஒரு பெட்டி தக்காளி (14 கிலோ) ரூ.20-க்கு விற்றது. (ஒரு கிலோ ரூ.2-க்கும் குறைவு).
இதனால் செலவு செய்த தொகைகூட கிடைக்காததால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் செடிகளில் பறிக்காமல் விட்டும், கொண்டு வந்தும் தக்காளியை கொட்டிச் சென்றனர். மக்களுக்குக் குறைந்தவிலையில் தக்காளி கிடைத்தாலும், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதேபோல் வெங்காய விலையும் கடந்த வாரம் முதல் வீழ்ச்சியடைந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் காரணமாக வெங்காயத்தைப் பட்டறையில் இருப்பு வைத்து விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்தையும் விற்கவேண்டிய சூழலில் வரத்து அதிகரிப்பால் வெங்காய விலையும் வீழ்ச்சியடைந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், முருங்கைக்காய் காய்த்துக் குலுங்குவதால் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்துக்கு முன்பு வரை ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150-க்கு மேல் விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனையாகிறது. வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் முருங்கைக்காய் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.
இதுதவிர, சுரைக்காய் ஒரு கிலோ ரூ.5, புடலங்காய் ரூ.8, முள்ளங்கி ஒரு கிலோ ரூ.14, பீட்ரூட் 15, பூசணி, நூல்கோல் ரூ.15, சவ்சவ் ரூ.16, முட்டைக்கோஸ் ஒரு கிலோ ரூ.18 என காய்கறிகள் விலை குறைந்து விற்பனையாகிறது. தக்காளி, வெங்காயத்தைத் தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT