Last Updated : 18 Mar, 2022 04:20 AM

1  

Published : 18 Mar 2022 04:20 AM
Last Updated : 18 Mar 2022 04:20 AM

புதிதாக தேர்வான உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சிக்கொடி, அரசு முத்திரையுடன் வாகனங்களில் வலம்

மங்களூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுகுணாவின் கணவர் பயன்படுத்தும் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரசு முத்திரை.

விருத்தாசலம்

புதிதாக தேர்வாகியிருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் சிலர், தங்கள் சொந்த வாகனங்களில் கட்சிக் கொடியுடன் விதிகளை மீறி அரசு முத்திரையை பொருத்தி வலம் வருவது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநகர மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்களுக்கு அரசு சார்பில் வாக னங்கள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறு வழங்கப்படும் வாகனங்களை பெரும்பாலானோர் பயன்படுத்துவதை தவிர்த்து சொந்த வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்த வாகனத்தின் பதிவெண் பதாகையில் தாங்கள்வகிக்கும் பதவியையும், அதில் அரசு முத்திரையையும் பயன்படுத்தி வருகின்றனர். கூடவே கட்சிக் கொடியையும் பறக்கவிடு கின்றனர். சில இடங்களில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பெண்ணாக இருப்பின், அவரது கணவரே, பதவி பதாகை பொருத்திய வாக னத்தில் வலம் வருகிறார்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலை வரான சுகுணா என்பவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனம் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த அவரது கணவர் சங்கர், தனது காரில் கட்சிக் கொடி பறக்க, ‘சேர்மன், மங்களூர் யூனியன்’ என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட பதவி பதாகையை வைத்துள்ளார்.

அதில் அரசு முத்திரையும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், வாகனத்தில் பம்பரும் இடம்பெற்றுள்ளது. இந்த வாகனத்தில் நேற்று அவர், திட்டக்குடியில் அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் கலந்து கொண்டார்.

இதுகுறித்து கடலூர் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரின் நேர்முக உதவியாளர் கூறுகையில், "இவ்வாறு கட்சிக் கொடியோடு அரசு முத்திரையை சேர்த்து தங்கள் சொந்த வாகனங்களில் பயன்படுத்துவது தவறு. அவ்வாறு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என்றார்.

இதுகுறித்து மங்களூர் ஊராட்சி ஒன்றியத் தலைவரின் கணவர் சங்கரிடம் கேட்டபோது, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் இதுபோன்று பயன் படுத்துவதால், அதைப்பார்த்து தானும் பயன்படுத்திவருவதாகத் தெரிவித்தார்.

சட்டப்படி இது தவறு

சென்னை உயர் நீதிமன்றம் 05.01.2022-ல் வழங்கிய நீதிப் பேராணையில், ‘முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்கள் வாகனங்களில் மத்திய, மாநில அரசின் சின்னங்கள், ஸ்டிக்கர்கள், கொடிகளை பெயர்ப் பலகைகள் மற்றும் கடிதங்களில் தவறாகப் பயன்படுத்துவது குற்றம்’ என்று குறிப்பிட்டு, இதில்உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, மத்திய, மாநில அரசின் சின்னங்களை அனுமதியின்றித் தவறாகப் பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு, அரசு சின்னத்தை சாட்சிகள் முன்னிலையில் பறிமுதல் செய்யவும், அந்த நிகழ்வைக் காணொலிக் காட்சியாகப் பதிவு செய்யவும் காவல்துறைக்கு டிஜிபி அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x