Published : 18 Mar 2022 04:15 AM
Last Updated : 18 Mar 2022 04:15 AM

வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் மீண்டும் சேதம்: 2 ஆண்டுகளாக சிரமத்தை எதிர்கொள்ளும் வாகன ஓட்டிகள்

வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் மீண்டும் சேதம் ஏற்பட்டுள்ள பகுதியை சுற்றி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வாகனங்கள் சிரமப்பட்டு செல்கின்றன.

தூத்துக்குடி

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் மீண்டும்சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால்வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி- காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம்ஆண்டு இப்பணி தொடங்கப்பட்டு, 2013-ம்ஆண்டு முடிவடைந்து வாகனபோக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

இந்த நான்குவழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரியநான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

ஆனால், கட்டப்பட்டு நான்கேஆண்டுகளில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒரு பகுதியில் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் சுமார் 6 மாத காலம் இந்தப் பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது.

2 ஆண்டுகளாக மூடல்

இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி பாலத்தின் மற்றொரு பகுதியில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) 2 பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இரு மார்க்கங்களில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒருவழிப் பாதை (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) வழியாக திருப்பி விடப்பட்டன. பாலம்சேதமடைந்து இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட போதும், இன்னும் சீரமைக்கப்படவில்லை.

வாகனங்கள் சென்று வரும் இந்த ஒருவழிப் பாதை பகுதியில் கடந்த நவம்பர் 2-ம் தேதி மீண்டும் திடீரென ஓட்டை விழுந்தது. அதை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிகமாக சீரமைத்தனர். சாலை தடுப்புகளை போட்டு மறைத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஒரு வாரத்துக்கும் மேலாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் அதே பகுதியில் நேற்று மீண்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. காலை 11.30 மணியளவில் பாலத்தின் மேற்பரப்பில் பெரிய கீறல்கள் விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல்அறிந்ததும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு வந்து சேதமடைந்த பகுதியைச் சுற்றி தடுப்புகளை ஏற்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் துணைப் பொதுமேலாளர் மற்றும் திட்டஇயக்குநர் பி.சங்கர் கூறியதாவது:

வல்லநாடு பாலத்தை மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளனர். ஆய்வில் பாலம் வலுவானதாக இருப்பதாகவே தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் பாலத்தில்முழமையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

ரூ.21 கோடியில் சீரமைப்பு

அதன்பேரில் பாலத்தின் இரு பகுதிகளையும் முழுமையாக சீரமைக்க ரூ.21 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. அதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிக்கான டெண்டர் கோரப்படும். டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஏப்ரல் 3-வது வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். 60 நாட்களில் சீரமைப்பு பணி முடிக்கப்படும். பாலத்தின் இரு பகுதிகளும் முழுமையாக சீரமைக்கப்படும்.

பாலத்தில் நிரந்தர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வரை சில இடங்களில் அவ்வப்போது லேசான சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி தான் தற்போது சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறு, சிறு சேதங்களால் எந்தவித பாதிப்பும் கிடையாது. எனவே, வாகன ஓட்டிகள் அச்சப்படத் தேவையில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x