Published : 15 Mar 2022 04:15 AM
Last Updated : 15 Mar 2022 04:15 AM
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் இயற்கை விவசாயப் பணிகளை கைதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதை பொதுமக்களுக்கு அறியச் செய்யும் வகையிலான தொடக்க நிகழ்வு நேற்று மாலை நடந்தது. இந்த கைதிகளுக்கு நாள்தோறும் 200 ரூபாய் கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகேயுள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை வழக்கில் கைதானோர், தண்டனை பெற்றோர் என மொத்தம் 244 சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சிறைத் துறைத் தலைவர் ரவிதீப் சிங் சாகர் வழிகாட்டுதலில் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தன்னார்வ நிறுவனங்கள் மூலம் கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிப்பது, யோகா, நடனப் பயிற்சி மூலம் அவர்களது மன அழுத்தத்தைப் போக்குவது போன்ற திட்டங்களும் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது புதிய முயற்சியாக சிறையில் ஆடு, மாடு, கோழி, முயல்கள் வளர்த்தல் மற்றும் இயற்கை விவசாயம் என ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் தொடங்கப்பட்டுள்ளது. முற்றிலும் சிறைவாசிகளைக் கொண்டு இந்தப் பணிகள் நடக்கின்றன.
மத்திய சிறை வளாகத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நிலத்தை உழுது, பாத்தி கட்டி, வாழை, மஞ்சள், அண்ணாசி உள்ளிட்ட தோட்டப் பயிர்களை முதற்கட்டமாக சிறைவாசிகள் நடவு செய்துள்ளனர். இதற்கான உரங்கள் அங்கு வளர்க்கப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளில் இருந்து பெறப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறை வளாகத்தில் உள்ள பழைய வீணான பொருட்களைக் கொண்டு ஆடு, மாடுகளுக்கான கொட்டகையும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இந்த விவசாயப் பணியில் முதற்கட்டமாக 75 தண்டனைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தினசரி வேலைக்காக ரூ.200 வரை கூலியாக வழங்கப்படுகிறது. இங்கு விளையும் காய், கனிகளை புதுச்சேரி சந்தையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்தவும், அவர்கள் வெளியே சென்ற பிறகு சுயதொழில் செய்து வருவாய் ஈட்டவும் ஏதுவாக இதுபோன்ற பணிகளை மேற்கொண்டுள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதிகளின் ஒருங்கிணைந்த விவசாய பணிகளை பொதுமக்களுக்கு அறியச் செய்யும் வகையிலான தொடக்க நிகழ்வு நேற்று மாலை நடந்தது. நிகழ்வுக்கு சிறைத்துறை ஐ.ஜி ரவிதீப் சிங் சாகர் முன்னிலை வகித்தார். சிறை கண்காணிப்பாளர் அசோகன், துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர்.
‘உழைப்பது மன நிம்மதியைத் தருகிறது’
“சிறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில், கடந்த 15 நாட்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். இந்தப் பணியை செய்து விட்டு படுக்கும் போது, நிம்மதியான உறக்கம் வருகிறது. மனநிம்மதியைத் தருகிறது. தண்டனை காலம் முடிந்தால் சிறையில் இருப்போரை தமிழகம், மற்றும் வட மாநிலங்களில் விடுதலை செய்கிறார்கள். அதுபோல் எங்களையும் விடுதலை செய்யவேண்டும். எஞ்சிய காலத்தில் இதுபோன்ற விவசாயத்தை செய்து வாழ விரும்புகிறோம். இங்கு நாங்கள் உழைத்துப் பெறும் 200 ரூபாய் ஊதியத்தை, மிகப்பெரிய ஒரு ஊதியமாக கருதுகிறோம்” என்று இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறைவாசிகள் தெரிவித்தனர்.
அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறைவாசிகளால் உருவான ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தை தொடங்கி வைத்து, பாராட்டிப் பேசினர். அப்போது, சிறைவாசிகள் தாங்கள் வளர்த்து வரும் முயல்,கோழிகளை எடுத்துக் காட்டினர்.
தொடர்ந்து, தங்கள் கோரிக்கைகளை சிறைவாசிகள் எடுத்துக் கூற, நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள், சிறைவாசிகளின் பிரச்சினைகளை முதல்வரிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT