Published : 13 Mar 2022 04:15 AM
Last Updated : 13 Mar 2022 04:15 AM
தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே கடமலைக் குண்டுவைச் சேர்ந்த ராமசாமி மனைவி வீரழகி(50). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அறுவை சிகிச்சைக்காக இவருக்கு நேற்று முன்தினம் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இதில் வீரழகியின் உடல்நிலை மோசமானது. எனவே தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இவர் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மதுரை-தேனி சாலையில் மறியல் செய்தனர்.
இவர்களுடன் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, ஆண்டிபட்டி துணை கண்காணிப்பாளர் தங்க கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர். தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT