Published : 10 Mar 2022 04:00 AM
Last Updated : 10 Mar 2022 04:00 AM

மாணவிகள் பள்ளிக்கல்வியுடன் தற்காப்புக் கலைகளை கற்க வேண்டும்: கிருஷ்ணகிரி டிஎஸ்பி அறிவுரை

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினத்தையொட்டி நடந்த சிறப்பு சிலம்பாட்ட பயிற்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு டிஎஸ்பி விஜயராகவன் இலவசமாக சிலம்பத்தை வழங்கினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின சிறப்பு சிலம்பாட்ட பயிற்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி டிஎஸ்பி விஜயராகவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பள்ளி மாணவிகள் அனைவருக்கும் இது போன்ற தற்காப்புக் கலைகள் தேவை. இதுமட்டுமின்றி தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களையும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

போட்டி நிறைந்த உலகம் என்பதால் தாங்கள் அதற்கேற்ற வாறு தங்கள் உடலையும், மனதை யும் உறுதியாக வைத்திருக்க வேண்டும். அதற்கு இது போன்ற சிலம்பாட்டம், யோகா, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பள்ளிப்பாடம் ஒன்று மட்டுமே வாழ்க்கைக்கு நிரந்தரம் ஆகாது. எனவே பள்ளிக்கல்வியுடன் தற்காப்பு கலைகளையும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.

இந்நிகழ்ச்சியில் நகர காவல் உதவி ஆய்வாளர் சிவசந்தர், சிலம்பாட்ட பயிற்சியாளர் குருராகவேந்திரன், மாவட்ட சிலம்பாட்ட செயலாளரும், காவேரிப்பட்டணம் உடற்கல்வி ஆசிரியருமான பவுன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு சிலம்புகளை இலவசமாக டிஎஸ்பி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x