Published : 10 Mar 2022 04:00 AM
Last Updated : 10 Mar 2022 04:00 AM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலப்பனையூர் ஊராட்சி உக்கடை கமலாபுரம் கிராமத்தில் ஓஎன்ஜிசி பணி காரணமாக வெளியேறும் ரசாயன கழிவுநீர் பாய்ந்ததால், விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து, கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதேபோன்ற கிணறு அமைப்பதற்கான பணி மேலப்பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட உக்கடை கமலாபுரம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கிணறு அமைக்கும்போது வெளியேறும் கழிவுநீர், ஓஎன்ஜிசி மைய வளாகத்துக்குள்ளேயே கிணறு போன்ற சேமிப்பு கலன் வெட்டப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேமிப்பு கலனில் கழிவுநீர் நிறைந்து, அருகில் உள்ள சுமித்ரா என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் பரவிவிட்டது. இதையடுத்து, சுமித்ரா மற்றும் அருகே உள்ள விளைநிலங்களின் விவசாயிகள் கழிவுநீர் கசிந்து வயலில் பரவுவதை தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சுமித்ராவுக்கு சொந்தமான விளைநிலத்தை சீரமைத்து தர வேண்டும் அல்லது அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நேற்று ஓஎன்ஜிசி பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது, ஓஎன்ஜிசி உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தி, உரிய இழப்பீடு பெற்றுத் தருவதாக பணியாளர்கள் உறுதியளித்தனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சுமித்ரா கூறியது: பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் ஓஎன்ஜிசி சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்பெல்லாம் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் துர்நாற்றமுடையதாக இருக்காது. ஆனால், அண்மைக்காலமாக வெளியேறும் கழிவுநீரில் அதிக துர்நாற்றம் வீசுகிறது. கிணறுகள் அமைக்க ரசாயனம் பயன்படுத்துவதால் இந்த துர்நாற்றம் வீசுவதாக கூறுகின்றார்கள். இதுகுறித்து ஒஎன்ஜிசி அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT