Published : 09 Mar 2022 05:45 AM
Last Updated : 09 Mar 2022 05:45 AM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு மட்டுமான கால்பந்து பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் தினத்தையொட்டி கிராமப்புற பெண் பிள்ளைகளுக் கான கால்பந்து பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘ஓடி விளையாடு பாப்பா நீ ஓளிந்திருக்கலாகாது பாப்பா என்ற பாரதியாரின் பாடல் மூலம் கல்வி ஒரு கண் என்றால் விளையாட்டு மற்றொரு கண். கல்வி கற்றுத்தராத பாடங்களை எல்லாம் விளையாட்டு கற்றுத்தரும். தோல்வியுற்றாலும் கூட நிமிர்ந்து நிற்கக்கூடிய ஒருதன்னம்பிக்கையை கொடுக்கக்கூடிய ஒரே துறை விளையாட்டு மட்டுமே. தோல்வியையும் நாம் ஒரு நல்ல அனுபவமாக அணுக வேண்டும். தோல்வியானது பல அனுபவங்களை நமக்கு கற்றுத்தரும்.
தோல்வியை சரியான முறையில் கையாளாத காரணத்தால் தான் நாம் பல்வேறு தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். ஒரு போட்டியில் தோல்வியுற்றாலும் கூட வெற்றி பெற்ற வீரர் மீது எந்த ஒரு பொறாமையும் கொள்ளாமல் அவர்களை நாம்தான் ஊக்கப் படுத்துவோம். கல்வியில் கவனம் செலுத்தி விளையாட்டை புறக்கணிக்கவோ அல்லது விளையாட்டில் கவனம் செலுத்தி கல்வியை புறக்கணிக்கவோ கூடாது. இந்த இரண்டிலும் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் அடைய முடியும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் பயிற்சியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT