Published : 08 Mar 2022 04:15 AM
Last Updated : 08 Mar 2022 04:15 AM

அவசர அழைப்புக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதில் மாநில அளவில் கோவை மாநகர காவல்துறை முதலிடம்

கோவை

அவசர அழைப்புக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதில், மாநில அளவில் கோவை மாநகர காவல் துறை முதலிடம் பிடித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு, குற்றச் சம்பவங்கள், போக்குவரத்து சார்ந்தபுகார்கள் தொடர்பாக காவல்துறையின் அவசர தொலைபேசி எண்ணான ‘100’ ஐ பொதுமக்கள், தொடர்பு கொண்டு தெரிவிக்கின்ற னர்.

இப்புகார்கள் சென்னை பெருநகர காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு, உடனடியாக தொடர்புடைய மாவட்ட அல்லது மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படுகிறது. பின்னர், காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் கோவை மாநகர காவல்துறை முதலிடம் பிடித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் கூறும்போது,‘‘கோவை மாநகரில் 15 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. 24 ரோந்து வாகனங்கள் உள்ளன. சரவணம்பட்டி, பீளமேடு, சிங்கா நல்லூர் போன்ற எல்லைப்பரப்பு அதிகம் உள்ள, குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டரோந்து வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் தலா ஒரு ரோந்து வாகனங்கள் பயன் படுத்தப்படுகிறது. மாநகர காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தவுடன், ரோந்து வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தகவல் வந்த இடத்துக்கு சென்று விசாரிக்கின்றனர்.

இதுதொடர்பாக மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாத ஆய்வின்படி, அவசர அழைப்புக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதில், தமிழக அளவில் கோவை மாநகர காவல்துறை முதலிடத்தில் உள்ளது. தகவல் கிடைத்த 2 நிமிடம் 59 விநாடிகளுக்குள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு காவலர்கள் சென்று விசாரிக்கின்றனர். 2-வது இடத்தில் கரூர் மாவட்ட காவல்துறையும் (3 நிமிடம் 12 விநாடி), 3-வது இடத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையும் (3 நிமிடம் 17 விநாடி) உள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x