Published : 02 Mar 2022 06:30 AM
Last Updated : 02 Mar 2022 06:30 AM
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ‘மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் கொடுத்தால் தான் நெல் கொள்முதல் செய்வோம்’ என கொள்முதல் நிலைய அலுவலர்கள் கறார் காட்டுகின்றனர்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் அறுவடையான நெல் 20 நாட்களுக்கும் மேலாக வெயிலில் கிடந்து வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப் பட்டு, கடந்த மாதம் தொடக்கம் முதல் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய அரசு சார்பில் மாவட்டத்தில் 181இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை, கொள் முதல் செய்யும் அலுவலர்கள் ஒரு மூட்டைக்கு ரூ.40 முதல் 45 வரை கமிஷன் தொகையை ரொக்கமாகப் பெற்றுக் கொண்ட பின்னர் தான் கொள்முதலுக்கான ரசீதையே வழங்குகின்றனராம். இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தீவளூர், தாழநல்லூர், சாத்துக்கூடல், நந்தப்பாடி பகுதி விவசாயிகள் தெரிவிக் கின்றனர்.
குறிப்பாக, விருத்தாசலத்தை அடுத்த தீவளூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் கடந்த 21 நாட்களுக்கு மேலாக களத்திலேயே வைத்துள்ளனர். கமிஷன் தொகை யால் தேங்கி கிடக்கும் நெல் நிறம் மாறி வீணாவதாகவும், நெல் நிறம்மாறுவதால் அவற்றை குறைந்த விலைக்கு விற்கும் நிலை உருவாகி யிருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இந்தச் சிக்கலுக்கு பயந்தே பல விவசாயிகள், கொள்முதல் நிலைய அலுவலர்கள் கேட்கும், கமிஷன் தொகையை தந்து விடுவதாகவும், தர வாய்ப்பில்லாத விவசாயிகள் இதுபோன்ற சிக்கலில் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ‘ஒரு மூட்டைக்கு ரூ. 45 கமிஷன்’ என்ற வகையில் தீவளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 230 மூட்டைகளுக்கு ரூ.10,350 ஆயிரம் அளித்து, தனது நெல்லை விற்பனை செய்ததை வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதுதவிர ஊருக்குள் ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு கோஷ்டியாகவும், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு கமிஷன் தொகையை தங்களுக்குத் தான் தரவேண்டும் என வற்புறுத்துவதால், நெல் கொள்முதலில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘விவசாயிகளிடம் இருநது நெல் கொள்முதல் செய்யும்போது அவர்களிடமிருந்து எந்தவித தொகையும் வசூலிக்கக் கூடாது’ என வேளாண்துறை அமைச்சர் அறிவித்திருக்கும் நிலையில், அவரது சொந்த மாவட்டத்திலேயே நெல் கொள்முதலில் கமிஷன் பெறுவது வேதனையளிக்கிறது என்று இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
‘முறையாக புகார் தாருங்கள்’
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசுவிடம் கேட்டபோது, “ கடலூர் மாவட்டத்தில் உள்ள 181 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், நடப்பு பருவத்தில் இதுவரை 89 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எந்தத் தொகையும் வசூலிக்கக் கூடாது; அவ்வாறு வசூலிப்பவர்கள் மீது குறிப்பிட்டு, முறையாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT