Published : 01 Mar 2022 08:56 AM
Last Updated : 01 Mar 2022 08:56 AM

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் உக்ரைனில் குகை அறைகளில் தஞ்சம்: இந்திய அரசு மீட்கக் கோரி வீடியோ வெளியீடு

உக்ரைன் நாட்டில் குகை அறைகளில் தங்கியுள்ள தஞ்சவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள்.

தஞ்சாவூர்

உக்ரைனில் குகை அறைகளில் தங்கியுள்ள தஞ்சாவூரைச் சேர்ந்தமாணவிகள் வீடியோ ஒன்றை தங்களின் பெற்றோருக்கு அனுப்பி,தங்களை இந்திய அரசு விரைந்து மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஆஷா, தஞ்சாவூரைச் சேர்ந்த மார்ஷெலின், பிரபாவதி உட்பட 9 மாணவிகள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகின்றனர். அவர்கள் தங்களின் பெற்றோருக்கு நேற்று ஒரு வீடியோவை அனுப்பியுள்ளனர். அதில் மாணவிகள் கூறியிருப்பது:

உக்ரைன் நாட்டில் உள்ள ஜபோரிஷியா என்னும் இடத்தில் நாங்கள் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறோம். தற்போது, இங்கு போர் நடைபெறுவதால், குகை அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். கடந்த 4 நாட்களாக குகையில்தான் இருந்து வருகிறோம். இங்கு தங்க வேண்டிய அளவைத் தாண்டி அதிக நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, எங்களுக்கு பயமாக உள்ளது.

நாங்கள் தங்கியுள்ள குகையில் உணவு, தண்ணீர் இல்லை. எங்களுக்கு இயற்கை உபாதையை கழிப்பதுகூட சிரமமாக உள்ளது.

எங்களை வழிநடத்தி வெளியே கொண்டுவர யாரும் இல்லை. குண்டுகளின் சத்தம் கேட்கும்போதெல்லாம் இதயத் துடிப்பே நின்று விடும்போல இருக்கிறது. ஒவ்வொரு முறையும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கும்போது, அடுத்த முறை நாமும் உயிருடன் இருப்போமா என தெரியாமல் பயத்துடன் தவித்து வருகிறோம்.

பலமுறை விமானத்துக்கு முன்பதிவு செய்து, அது ரத்தாகி விட்டதால் இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு வெளியுறவு துறையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

ஜபோரிஷியாவில் இருந்து 500 கி.மீ தொலைவில் உக்ரைன் எல்லையில் உள்ள மால்டோவுக்குச் செல்ல 24 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். எனவே, அந்தபகுதிக்கு நாங்கள் செல்ல அந்த நாட்டிடம் இந்திய அரசு அனுமதி பெற வேண்டும். இதுதான் ஒரே தீர்வு. எங்களை எப்படியாவது காப்பாற்ற இந்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x