Published : 28 Feb 2022 11:55 AM
Last Updated : 28 Feb 2022 11:55 AM

பெண்களை தைரியமாக செயல்பட விடவேண்டும்: தாம்பரத்தில் வார்டு உறுப்பினர்களின் கூட்டத்தில் அமைச்சர் அறிவுரை

குரோம்பேட்டை

தாம்பரம் மாநகராட்சி வார்டு தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களைத் தைரியமாகச் செயல்பட விட வேண்டும். அவர்களுக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது. வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பரசன் அறிவுறுத்தினார்.

தாம்பரம் மாநகராட்சி வார்டு தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்) இ.கருணாநிதி (பல்லாவரம்) மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.செந்தில்குமார் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

வேட்பாளர்களின் தேர்வு, இயக்கத் தோழர்களின் உழைப்பு ஆகியவை தாம்பரத்தில் பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளன. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து 54 இடங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

அந்த நம்பிக்கை வீண் போகச் செய்யாமல் சிறப்பாகவும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். வாக்களித்த, வாக்களிக்காத பொதுமக்களை நேரில் வீடு வீடாகச் சென்று சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்.

அப்போது, பொதுமக்கள் புகார் தெரிவித்தால் அந்த புகாரைக் குறித்துக் கொண்டு அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களால் முடியவில்லையெனில், சட்டப்பேரவை உறுப்பினர் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள். அப்படியும் முடியவில்லையெனில் என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்.

காலையிலேயே தெருத் தெருவாகச் சென்று என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிந்து அதிகாரிகளிடம் தெரிவித்து அந்த பிரச்சினைக்கு மாலைக்குள் தீர்வு காண வேண்டும். பொதுமக்களுடன் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சித் தலைமை யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறதோ அவர்களை மேயராகவும் துணை மேயராகவும் தேர்வு செய்ய வேண்டும்.

பெண்கள் தைரியமாகச் சென்று பணியாற்ற வேண்டும். பெண் உறுப்பினர்களைத் தைரியமாகச் செயல்பட விட வேண்டும். அவர்களின் கணவர்கள் உறவினர்கள் இடையூறு செய்யக் கூடாது. கட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடாது. நீங்கள் தரும் உழைப்புதான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை மனதில் வைத்துப் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x