Published : 25 Feb 2022 06:11 AM
Last Updated : 25 Feb 2022 06:11 AM
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியை சுயேச்சைகளின் ஆதரவுடன் கைப்பற்ற திமுக-அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு நகர்மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 12 இடங்களிலும், மதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல, அதிமுக 13 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக கூட்டணியும் அதிமுகவும் சம பலத்தில் உள்ளதால், நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்ற சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்களின் ஆதரவைப் பெற திமுக- அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
நகர்மன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடம் வழங்காததால், காங்கிரஸ் கட்சியினர் 4 வார்டுகளில் தனித்து போட்டியிட்டனர். இந்த 4 வார்டுகளிலும் காங்கிரஸும், திமுகவும் போட்டியிட்டதால், வாக்குகள் பிரிந்து, 4, 20- வது வார்டுகளில் அதிமுகவும், 26, 29-வது வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
அதிமுகவிலிருந்து பின்னர் அமமுகவுக்கு சென்ற ஜவஹர்பாபு அக்கட்சியிலிருந்தும் விலகி, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி வெற்றுள்ளார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் நகர்மன்றத் தலைவரான மதிமுகவின் ஜெயபாரதி விஸ்வநாதன், திமுகவின் பிரியா இளங்கோவன், காந்திகுணசேகரன், சண்முகப்பிரியா உள்ளிட்டோர் நகர்மன்றத் தலைவராக முயற்சி செய்து வருகின்றனர்.
அதிமுகவில் நகரச் செயலாளர் பாஸ்கரன் மனைவி லதா, மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் உதயகுமார் மனைவி பிரபாகனி ஆகியோரும் நகர்மன்றத் தலைவர் பதவி பெற முயற்சித்து வருகின்றனர்.
இதில், நகர்மன்றத் தலைவராக, மதிமுகவின் ஜெயபாரதி விஸ்வநாதனை திமுகவினர் முன்னிறுத்தினால், அவரது உறவினரான ஜவஹர்பாபு உள்ளிட்ட சில சுயேச்சைகளின் ஆதரவு அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
சுயேச்சையாக வென்ற 2-வது வார்டு ராதிகாரவி, 5-வது வார்டு ரஷ்யாபேகம் ஆகிய இருவரையும் திமுகவினர் சென்னைக்கு அழைத்துச் சென்று முதல்வரை சந்திக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதேபோல, மேலும் சில சுயேச்சை வேட்பாளர்களையும் தங்கள் பக்கம் இழுக்க உள்ளூர் திமுகவினர் களமிறங்கியுள்ளனர்.
அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவை பெற முயற்சி மேற்கொண்டால் அதிமுக நிச்சயம் பட்டுக்கோட்டை நகர்மன்றத்தை கைப்பற்ற முடியும் என அதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதனால்,பட்டுக்கோட்டை நகராட்சியில் மார்ச் 4-ம் தேதி நடைபெறும் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல், டெல்டா மாவட்டங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT