Published : 22 Feb 2022 06:18 AM
Last Updated : 22 Feb 2022 06:18 AM

புளியங்குடி வாக்கு எண்ணும் மையத்துக்குள் நள்ளிரவில் காரில் நுழைந்த திமுகவினர்; அதிமுகவினர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

புளியங்குடியில் வாக்கு எண்ணும் மையத்தை அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதி 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 6 வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (22-ம் தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. புளியங்குடி நகராட்சி மற்றும் ராயகிரி, சிவகிரி, வாசுதேவநல்லூர் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. மற்ற வாக்கு எண்ணும் மையங்களைப்போல் இந்த மையத்திலும் 3 அடுக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் பிரதான வாயிலில் போலீஸ் பாதுகாப்பு இல்லாதபோது, மையத்தின் உள்ளே திமுகவினர் காரில் சென்றதாகக் கூறப்படுகிறது. உள் பகுதியில் பாதுகாப்புப் பணியில்இருந்த போலீஸார், காரில் வந்தவர்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, காரில்வந்தவர்கள் வெளியே வந்துள்ளனர்.

இதைப் பார்த்த அதிமுகவினர், காரை சிறைபிடித்தனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முயன்றதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுக மட்டுமின்றி பாஜக, சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்களும் அங்கு திரண்டனர். காரில் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வாக்கு எண்ணும் மையம் அருகில் புளியங்குடி - கோவில்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், போராட்டத்தை கைவிட மறுத்துதொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட அனுமதிப்பதாகக் கூறினர். இதையடுத்து, அதிமுக பிரமுகர்கள் சிலர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் வாக்கு எண்ணும்மையத்தில் யாரும் நுழையவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மறியலை கைவிட்டு அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x