Published : 20 Feb 2022 08:05 AM
Last Updated : 20 Feb 2022 08:05 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்குப் பதிவு மையங்களில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வேலுார் சரக டிஐஜி ஆனி விஜயா வாக்குப்பதிவு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது. இன்று (நேற்று) காலை 9 மணி நிலவரப்படி 11 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
வேலுார் சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 5 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இத்துடன், ஆயுதப்படையினர், ஊர்க்காவல் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர டிஎஸ்பிக்கள் தலை மையில், சிறப்பு தனிப்படை அமைத்து வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறவும், பிரச்சினைகள் ஏற்படாத வகை யில் வாக்குப்பதிவு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை, எந்த ஒரு வாக்குப் பதிவு மையத்திலும் பிரச்சினைகள் ஏதும் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் வாய் தகராறு ஏற்பட்டது. அவை, காவல் துறையினர் மூலம் சரி செய்யப்பட்டது.
வாக்குப்பதிவு முடிந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் அமைக் கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்டிராங் ரூம்களில்’ மின்னணு வாக்கு இயந் திரங்கள் வைக்கப் பட்டு அந்த அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம்களுக்கு ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் இன்றிரவு (நேற்று) முதல் 22-ம் தேதி வரை 3 சிப்ட் அடிப்படையில் சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர்.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட் டுள்ளன. அங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அனுமதியில்லாமல் யாரும் நுழையக்கூடாது’’ என்றார்.
இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவினை வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன், கூடுதல் எஸ்பி சுப்பாராஜூ, டிஎஸ்பிக்கள் சாந்தலிங்கம்(திருப்பத்துார்), சுரேஷ் பாண்டியன் (வாணியம் பாடி), சரவணன் (ஆம்பூர்) மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT