Published : 18 Feb 2022 07:31 PM
Last Updated : 18 Feb 2022 07:31 PM
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தை அமைத்திடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடித்தத்தில், “கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொது மக்களிடையே உள்ள கவலையை இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். இந்தத் திட்டத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஆறு அணுமின் உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ஆறு அலகுகளில், அலகுகள் 1 மற்றும் 2 ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. அலகுகள் 3 மற்றும் 4 கட்டுமானத்தில் உள்ளன. அலகுகள் 5 மற்றும் 6 இன்னும் நிறுவப்படவில்லை.
ஆறு அணுமின் உலைகளிலிருந்து உருவாகும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, அணு உலைக்கு அப்பால் (Away from reactor) சேமித்து வைப்பதற்கான வசதிகளை அமைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டிருக்கிறது.
இது தொடர்பாக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், அலகுகள் 1 மற்றும் 2-க்கு முன்பு அனுமதி அளித்தபோதே, இரண்டு அலகுகளில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, தற்காலிகமாக அணுமின் நிலைய வளாகத்திற்குள் (உலையில்) சேகரித்து, சேமித்து, பின்னர் அதன் சொந்த நாடான ரஷ்யாவிற்கே திருப்பியனுப்பிட ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறோம்.
ஆனால் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, அணு உலைக்கு அப்பால் (Away from reactor) சேமித்து வைப்பதற்கான வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்திட முடிவு செய்யப்பட்டது. மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள், அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் ஆபத்துகள் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட தமிழக மக்களின் ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் இதில் பகிர்ந்து கொள்கிறோம்
சுற்றுச்சூழல் மற்றும் அத்தகைய ஆலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பேரழிவினை ஏற்படுத்திட வழிவகுத்திடும். மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அச்சம் கொண்டுள்ளனர். அதன்காரணமாக அணுமின் நிலைய வளாகத்திற்குள், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேமித்து வைத்திடும் வசதியை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்களைக் கருத்தில்கொண்டு, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம். இந்நடவடிக்கை அலகுகள் 1 மற்றும் 2-க்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த நான்கு அலகுகளுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது சாத்தியப்படாவிடில், மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதியில், நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு (Deep Geological Repository) அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம். தமிழ்நாட்டிலுள்ள எட்டு கோடி மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT