Published : 18 Feb 2022 07:28 AM
Last Updated : 18 Feb 2022 07:28 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-வுக்கு பெரிய வெற்றியை தந்த சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யார் வெற்றி வாகை சூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு திமுக மற்றும் அதிமுகவினரிடம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் அதிமுகவும், கூட்டணி கட்சியான பாமக 2 தொகுதிகளிலும், திமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. இது திமுக-வுக்கு பின்னடைவாகவே கருதப்பட்டது. சேலம் மாவட்ட பேரவைத் தேர்தல் வெற்றியின் மூலம் தனது சொந்த மாவட்டத்தில் தனக்குள்ள செல்வாக்கை மீண்டும் முன்னாள் முதல்வர் பழனிசாமி நிரூபித்து காட்டினார்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்போடு தேர்தல் பணியில் தீவிரம் காட்டியது.
மேலும், ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் சேலம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளை அதிகம் கைப்பற்றி திமுக தலைமையிடம் நற்பெயர் பெற வேண்டும் என திமுக நிர்வாகிகள் தேர்தல் களத்தில் தீவிரம் காட்டினர்.
அதிமுகவைப் பொறுத்தவரை சட்டப்பேரவை தேர்தலின்போது, அதிமுக-வுக்கு சாதகமாக அதன் கூட்டணியான பாமக இருந்தது. தற்போது, பாமக, தனித்துப் போட்டியிடுவது அதிமுக-வுக்கு பின்னடை வாகவே கருதப்படுகிறது.
இருந்தபோதிலும், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் தேர்தல் பணியில் அதிமுகவினர் தீவிரம் காட்டினர்,
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும், சேலம் மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்ததோடு, நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தினார்.
அதிமுக-வுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க சேலம் மாவட்டத்தில் வெற்றியைக் கைப்பற்றுவது முக்கியம் என்ற நிலையில் திமுக-வும், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் அதிக உள்ளாட்சி இடங்களில் வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவும் தேர்தல் பிரச்சார பணியை நிறைவு செய்துள்ளது.
இதனால், சேலம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை திமுக மற்றும் அதிமுகவினர் மட்டும் அல்லாமல் மற்ற அரசியல் கட்சிகளும் பரபரப்புடன் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT