Published : 18 Feb 2022 07:35 AM
Last Updated : 18 Feb 2022 07:35 AM

கரோனா பாதிப்பு, உள்ளாட்சித் தேர்தல் பணிகளால் ரசிகர்கள் வருகையின்றி ரத்து செய்யப்படும் சினிமா காட்சிகள்: ஈரோடு திரையரங்கு உரிமையாளர்கள் சோகம்

ஈரோடு

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என அரசு அறிவித்தாலும், ரசிகர்கள் வருகையில்லாததால் காட்சிகளை ரத்து செய்யும் நிலைக்கு ஈரோடு திரையரங்குகள் தள்ளப்பட்டுள்ளன.

கரோனா ஊரடங்கு காரணமாக உணவகங்களில் தொடங்கி பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு காரணமாக, திரையரங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொற்றுப் பரவல் அதிகமாக இருந்தபோது, திரையரங்குகள் முழுமையாக மூடப்பட்டன. அதன்பின்னர் தளர்வு அறிவிக்கப்பட்டு 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தபோது, திரையரங்குகளில் இரவுக்காட்சி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது தொற்று குறைந்துள்ளதால், நேற்று முன்தினம் முதல் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், நடைமுறையில் திரையரங்குகளில் 10 சதவீதம் ரசிகர்கள் கூட வராத நிலை தொடர்கிறது.

ஈரோடு நகரில் 11 திரையரங்குகள் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 37 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 4 காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. ரசிகர்கள் வருகை குறைந்த நிலையில், குறைந்தபட்சமாக 15 பேர் வந்தால் காட்சி இயக்கப்படும் என்ற நிலைக்கு திரையரங்குகள் தள்ளப்பட்டுள்ளன.

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இரண்டு திரை கொண்ட திரையரங்கில் எப்போதும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், நேற்று முன்தினம் இரவு ஒரு அரங்கில் ரசிகர்கள் வராததால் காட்சி ரத்து செய்யப்பட்டது. மற்றொரு அரங்கில், 10-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வரும்வரை காத்திருந்து படம் திரையிடப்பட்டது.

இதேபோல், ரயில் நிலையம் அருகில் உள்ள திரையரங்கிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மல்டிபிளக்ஸ் திரையரங்கில் எந்த படத்திற்கு ரசிகர்கள் அதிகம் வருகின்றனரோ, அந்த படக்காட்சி மட்டும் திரையிடப்படுகிறது. புறநகர் பகுதியில் பல திரையரங்குகள் ஓரிரு காட்சிகளை மட்டும் திரையிட்டு வருகின்றன.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதாவது:

கரோனா பாதிப்பால் திரையரங்கு இயக்கம் என்பது முற்றிலும் முடங்கிப் போனது. குடும்பமாக திரையரங்கிற்கு வருபவர்கள் முழுமையாகக் குறைந்து விட்டனர். தற்போது உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நடப்பதால், இளைஞர்களின் வருகையும் குறைந்து விட்டது

ரஜினிகாந்த், சிலம்பரசன் நடித்த படங்கள் வெளியானபோது மட்டும் அரங்கு நிறைந்த காட்சிகள் இருந்தன. தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் முதல் நாள் முதல் காட்சிக்கே 50 பேருக்குள்ளாகவே வருகின்றனர். இரவு நேரங்களில் ரசிகர்கள் வருகை என்பது முற்றிலும் குறைந்து விட்டது. திரையரங்கை சுத்தப்படுத்துதல், ஊழியர் சம்பளம், மின்கட்டணம் போன்றவற்றிற்கு தேவையான தொகை கூட கிடைக்காத அவல நிலை தொடர்கிறது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x