Published : 17 Feb 2022 07:11 AM
Last Updated : 17 Feb 2022 07:11 AM
விரைவில் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று ஆத்தூர் ராணிப்பேட்டை, சேலம் தாதகாப்பட்டி, கோட்டை மைதானத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசியதாவது:
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. ஆனால், தமிழக மக்கள் திமுக-வை கைவிடவில்லை. வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் பல நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தந்துள்ளார்.
அதிமுக ஆட்சியை விட்டு சென்ற போது ரூ.5.75 லட்சம் கோடி கடனில் விட்டு சென்றதுடன், கஜானாவை காலி செய்து சென்றனர். இருப்பினும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும், திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கான உரிமைத் தொகை விரைவில் கொடுக்கப்படும்.
“27 அம்மாவாசைக்கு பிறகு தமிழகத்தில் திமுக இருக்காது” என முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறுகிறார். தமிழகத்தில் இருக்கும் இரண்டு அமாவாசைகள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இஸ்லாமிய பெண்கள் அகற்றம்
சேலம் கோட்டையில் நடைபெற்ற திமுக பிரச்சார கூட்டம் தொடங்கும் முன்னர் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள். ‘சிறையில் பல வருடங்களாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை திமுக அரசு விடுதலை செய்ய வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், பதாகைகளை பறித்து பெண்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT