Published : 16 Feb 2022 07:43 AM
Last Updated : 16 Feb 2022 07:43 AM
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகிய இருவரும் ஈரோட்டில் பிரச்சாரத்தை முடித்துள்ள நிலையில், திமுக – அதிமுக இடையே வார்டுகளைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் ஒரு வார்டில் திமுக வேட்பாளர் எம்.விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வு பெற்றுள்ள நிலையில், 59 வார்டுகளில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், அதிமுக 55 வார்டுகளிலும், திமுக 46 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. இதில், 45 வார்டுகளில் திமுக- அதிமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
புதிய வாக்குறுதிகள் இல்லை
ஈரோட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், ஈரோடு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறநகரில் இரு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது, சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக அறிவிப்பு, அம்பேத்கர் சிலை நிறுவியது ஆகியவற்றை சாதனைகளாக குறிப்பிட்டார். முதல்வர் ஸ்டாலினின் பேச்சில் ஈரோடு நகர மேம்பாடு குறித்த புதிய வாக்குறுதிகள் எதுவும் இடம் பெறவில்லை என்பதோடு, ஒரே மாதத்தில் முடங்கிப்போன ஈரோடு மாநகராட்சியில் வாட்ஸ் அப் மூலம் புகார் பெறும் திட்டத்தை சாதனையாகக் குறிப்பிட்டதும் பலவீனமாக கருதப்படுகிறது.
கவனம் ஈர்த்த அதிமுக
அதேநேரத்தில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, ஈரோடு மாநகரத்திற்கும், மாவட்ட அளவிலும் செய்த திட்டங்களை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், மேம்பாலம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பயன்பாட்டுக்கு வந்த பல திட்டங்கள் குறித்து பழனிசாமி தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டுப் பேசினார்.
தலைவர்கள் பிரச்சாரத்தைப் பொறுத்தவரை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் பிரச்சாரம், அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிருப்தி, குழப்பம்
இது தவிர திமுகவில் வாய்ப்பு கிடைக்காத பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர். சிலர் சுயேச்சையாக களமிறங்கி திமுக வேட்பாளருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கரோனா காலத்தில் பெரும் தொகையை செலவிட்ட திமுக நிர்வாகிகள் தற்போது தேர்தலில் வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் அமைச்சர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
அதிமுகவில் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்து முன்னாள் துணை மேயர், மண்டல தலைவர், முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோர் காய் நகர்த்தி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வார்டுகளை தங்களுக்கு என ஒதுக்கிக் கொண்டு, அதில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வதாக கட்சித் தலைமையிடம் உறுதி அளித்துள்ளனர். இந்த வெற்றிக்கு பரிசாக, மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்ப்பதால், உட்கட்சி குழப்பம் அதிமுகவைப் பொறுத்தவரை, தேர்தல் பணிக்கு சாதகமாகவே மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT