Published : 15 Feb 2022 09:04 AM
Last Updated : 15 Feb 2022 09:04 AM
அடுத்த 4 ஆண்டுகளில் தென் பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘தமிழகத்தில் திருப்பத்தூர் நகராட்சி பழமையும், பெருமையும் வாய்ந்த நகராட்சி ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடைபெற்றது. இதை பொருத்துக்கொள்ள முடியாத மக்கள் கடந்த சட்டப் பேரவை தேர்தல் மூலம் திமுக அரசை தேர்ந்தெடுத்தனர்.
திமுக ஆட்சி அமைத்து 9 மாதங்கள் ஆகிறது. தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவோம் எனக்கூறினோம் அதையும் செய்து விட்டோம். கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் தள்ளுபடியும் செய்துள்ளோம். தற்போது குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கு வோம் எனக்கூறினோம். அதையும் விரைவில் தரப் போகிறோம். அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலினின் புகழ் வளர்ந்துள்ளது. பிரதமர் ஆகக் கூடிய தகுதி மு.க.ஸ்டாலினிடம் உள்ளது.
தமிழக மக்கள் நாட்டை ஆள தகுதியுள்ள தலைவரை தேர்ந் தெடுத்துள்ளார்கள். அதேபோல, உள்ளாட்சி தேர்தலிலும் தகுதி யான கவுன்சிலர்களை தேர்வு செய்ய வேண்டும். நல்ல கவுன் சிலர்களை தேர்வு செய்தால் அரசின் திட்டங்களும், அதற்காக ஒதுக்கீடு செய்யும் பணமும் மக்கள் வளர்ச்சிக்கு பயன்பெறும். தகுதியில்லாதவர்களை தேர்வு செய்தால் எந்த பயனும் கிடைக் காது.
கட்சி உறுப்பினர் தவறு செய்தால் அவர் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் ஒரே கட்சி திமுக மட்டுமே. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமைச் சரவை பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம் கொடுத்து, உங்களுக்கு எந்த துறை வேண்டுமென்று கேட்டார். நான் நீர்வளத்துறை வேண்டுமென்றேன். காரணம், ஆற்று நீரை சேமித்து தமிழகத்தில் விவசாயத்தை செழிக்க வேண்டும் என்பதால் நீர்வளத்துறையை நான் தேர்வு செய்தேன்.
வறட்சியான பூமியை பசுமை யான பூமியாக மாற்ற பல திட்டங்களை தயாரித்து வைத்துள்ளேன். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அதை நிறைவேற்றுவேன். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் மோர்தானா அணை, ராஜா தோப்பு அணை, திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் அணைகளை நான் அமைச்சராக இருந்தபோது கட்டினேன்.
அதேபோல, தமிழகம் முழுவதும் 42 அணைகள் நான் அமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்டுள்ளன. மேலும், 100 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலாற்றுப்பகுதியில் 2 தடுப்பணைகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அடுத்த 4 ஆண்டுகளில் தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன். இதன் மூலம் விவசாயம் செழிக்கும், குடிநீர் பிரச்சினை தீரும், அடுத்த 50 ஆண்டு களுக்கு என் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT