Published : 13 Feb 2022 07:52 AM
Last Updated : 13 Feb 2022 07:52 AM
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவது 22-வதுமெகா கரோனா தடுப்பூசி முகாம்35 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னை அரசுபொது மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பூத் சிலிப் விநியோக பணி நடைபெறுவதால், இன்று (நேற்று) 35 ஆயிரம் இடங்களில் மட்டுமே தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. சென்னையை பொருத்தவரை 500 இடங்களில் மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 21 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3 கோடியே 65 லட்சத்து 4,295 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.இதுவரை 9 கோடியே 75 லட்சத்து7,326 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 18 வயது கடந்த 5 கோடியே 26 லட்சத்து 44,839 பேர் முதல் தவணையும், 4 கோடியே 7 லட்சத்து 6,468 பேர் இரண்டு தவணைதடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 70 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
23-வது முகாம் நடைபெறாது
அதேபோல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 27 லட்சத்து 6,982 பேருக்கு முதல் தவணையும், 8 லட்சத்து 59,360 பேருக்குஇரண்டு தவணையும் போடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியைபொருத்தவரை 5 லட்சத்து 32,077 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,792 ஊராட்சிகளிலும், 24 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த சனிக்கிழமை தேர்தல் என்பதால் 23-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது.
தற்போது கோவாக்சினை பொருத்தவரை 20 ‘டோஸ்’ செலுத்தும் அளவுக்கு குப்பிகளை தயாரித்து அனுப்புவதால், தடுப்பூசி வீணாகாமல் அதிகளவில் பொதுமக்கள் வரும் போது அந்ததடுப்பூசி போடப்படுகிறது. கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் குடும்பத்தினர் ஏறக்குறைய100-க்கும் மேற்பட்டோருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல்
மத்திய அரசிடம் இருந்துஇழப்பீடு தொகை வாங்கியவர்களுக்கு, மாநில அரசின் இழப்பீடு தொகையை வழங்கக்கூடாது என மத்திய அரசே அறிவுறுத்தியுள்ளது. அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை பொருத்தவரை பராமரிப்புநிதியை மாநில அரசு பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அதேபோல், அபெக்ஸ் புற்றுநோய் மையம் என்ற அறிவிப்பை கொடுத்து மத்திய அரசின் ஒதுக்கீடு ரூ.120 கோடியும், கட்டிடம் மற்றும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலஅரசின் புற்றுநோய் பதிவேட்டில் எவ்வளவு பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்ற பதிவேற்றம் செய்யும் பணியும் அவர்களால்தான் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் சுகாதாரத்துறை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.
ஒமைக்ரான் கரோனா பாதிப்பு எந்த அளவுக்கு வேகமாக உயர்ந்ததோ, அதே வேகத்தில் இறங்குகிறது. அந்தவகையில் இதோடு ஒமைக்ரான் கரோனா முடிவுக்கு வருமென எதிர்பார்க்கிறோம். விரைவில் அடுத்த பணிகளில் அனைவரும் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT