Published : 13 Feb 2022 09:11 AM
Last Updated : 13 Feb 2022 09:11 AM
டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மழையால் 1.5 லட்சம் ஏக்கரில் நெல்அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுஉள்ளன. மேலும், அறுவடை செய்த நெல்லில் ஈரப்பதம் அதிகரித்ததால், கொள்முதல் நிலையங்களில் 80 ஆயிரம் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியின் காரணமாக, காவிரி டெல்டாமாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவத்தில் 10 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டிருந்தது. தற்போது, அறுவடை தீவிரமாக இருந்த நேரத்தில் மழை பெய்ததால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்தன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளிலும், நாகை மாவட்டத்தில் திருக்குவளை, மேலவாழக்கரை, திருக்கண்ணபுரம், போலகம், தேவூர் பகுதிகளிலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்தன.
இதனால், வயலில் இயந்திரங்களை இறக்கி அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மழை தொடர்ந்து பெய்வதால், நெல்மணிகள் உதிரத் தொடங்கியுள்ளன.
டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் அறுவடையைஒட்டி, 950-க்கும் அதிகமான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுஉள்ளன. ஆன்லைன் பதிவு, சாக்குகள் பற்றாக்குறை, நாளொன்றுக்குஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 800 மூட்டைகள் வரை கொள்முதல் போன்றவற்றால் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டு,ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் தேங்கியுள்ளன.
தற்போது, மழை தொடர்ந்து பெய்வதால் கொள்முதல் நிலையங்களில் படுதாக்கள் பற்றாக்குறை காரணமாக மழையில் நெல்மணிகள் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 2 நாட்களாக கொள்முதல் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறியது: டெல்டாவில் மழையால் 1.5 லட்சம் ஏக்கரில் நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. வயலில் சாய்ந்த நெல்மணிகள் முளைத்துவிடும் நிலையில் உள்ளன.
அதேபோல, நெல் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் கொள்முதல் செய்யப்படாமல் நேரடி கொள்முதல் நிலையங்களில் 80 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை தேங்கியுள்ளன என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியது: 17 சதவீத ஈரப்பதம் வரை உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தற்போது மழை காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் கொள்முதல் நடைபெறவில்லை. மழை நின்றதும் வெயிலில் நெல்மணிகளை உலர்த்தி, கொள்முதலை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT