Published : 12 Feb 2022 12:18 PM
Last Updated : 12 Feb 2022 12:18 PM

ஈரோடு மாநகராட்சியில் திமுகவை விட கூடுதல் இடங்களில் போட்டியிடும் பாஜக: ஐந்து வார்டுகளில் மட்டுமே மக்கள் நீதி மய்யம் போட்டி

ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் திமுக போட்டியிடும் வார்டுகளை விட, கூடுதலான வார்டுகளில் பாஜக களமிறங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் மக்கள் நீதி மய்யம் மிகக்குறைந்த அளவாக ஐந்து வார்டுகளில் மட்டும் போட்டியிடுகிறது.

ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் 51-வது வார்டில் திமுக வேட்பாளர் எம்.விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வு பெற்றார். தேர்தல் நடக்கவுள்ள 59 வார்டுகளில், அதிகபட்சமாக 55 வார்டுகளில் அதிமுக களமிறங்கியுள்ளது. மூன்று வார்டுகளில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடுகிறது. 5-வது வார்டில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர், உட்கட்சி குளறுபடியால் கடைசி நேரத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்தார். இதனால், அந்த வார்டில் போட்டியிடாமலே அதிமுக இழந்துள்ளது.

அதிமுகவிற்கு அடுத்தபடியாக, தனித்து போட்டியிடும் பாஜக 49 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கட்சியின் நிர்வாகிகள், பெண்கள் என பலரையும் பாஜக களமிறக்கியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று,திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாஜக, தற்போது மாநகராட்சி தேர்தலிலும் அதிக வார்டுகளைப் பிடிக்க தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

கூட்டணிக்கு 14 வார்டுகளை ஒதுக்கித்தந்த திமுக 46 வார்டுகளில் போட்டியிடுகிறது. பெரும்பாலான வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளதால், மகளிரணியைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுக முக்கியப் பிரமுகர்கள் தங்களின் மனைவி உள்ளிட்ட குடும்ப பெண்களுக்கு வார்டுகளைப் பிடித்துக் கொண்டதால், மகளிரணியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்காத திமுக நிர்வாகிகள், அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராடும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்சிப்பதவி, கவுன்சிலர் பதவி வகித்தவர்களுக்கே இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அங்கும் அதிருப்திக் குரல் ஒலிக்கிறது. கொமதேக, மார்க்சிஸ்ட் ஆகியவை தலா 2 வார்டுகளிலும், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி 32 வார்டுகளிலும், தேமுதிக 28 வார்டுகளிலும், பாமக 27 வார்டுகளிலும், அமமுக 16 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. மக்கள் நீதிமய்யம் 5 வார்டுகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

ஈரோடு மாநகராட்சி தேர்தலில் சுயேச்சைகள் களத்தில் இருந்தாலும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக – பாஜக இடையே கூட்டணி இல்லை என்றாலும், குறிப்பிட்ட வார்டுகளில், கடைசி நேரத்தில் இரு தரப்பும் இணைந்து முடிவுகளை எடுத்து, வார்டினை கைப்பற்றும் முயற்சியில் இறங்க வாய்ப்புள்ளதாகவும், ஆளுங்கட்சியான திமுக கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவு வதாகவும் அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x