Published : 12 Feb 2022 11:11 AM
Last Updated : 12 Feb 2022 11:11 AM
விருதுநகர் நகராட்சியைக் கைப்பற்ற திமுக வியூகம் வகுத்து செயல்படுகிறது. அதே சமயம் இந்த முறையும் நகர்மன்றத் தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஒருவரும் சுயேச்சையாகக் களம் இறங்கியுள்ளார்.
36 வார்டுகளைக் கொண்ட விருதுநகர் நகராட்சி 2011 தேர்தலில் அதிமுக வசமானது. தற்போது 36 வார்டுகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. திமுக 23 வார்டுகளிலும், காங்கிரஸ் 11 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் 2 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.
இந்த முறை விருதுநகர் நகராட்சியை கைப்பற்ற திமுக திட்டம் வகுத்து செயல்படுகிறது. நகர்மன்றத் தலைவர் பதவி யாருக்கு என்பதில் திமுக, காங்கிரஸ் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2006 முதல் 2011 வரை விருதுநகர் நகர்மன்றத்தலைவராகப் பொறுப்பு வகித்த நாடார் மகாஜன சங்கப் பொதுச் செயலர் கரிக்கோல்ராஜின் மனைவி கார்த்திகா கரிக்கோல்ராஜ் இந்த முறை 35-வது வார்டில் சுயேச்சையாகக் களம் இறங்கியுள்ளார். இவரது மகன் விக்னேஷ்வரன் 32-வது வார்டில் போட்டியிடுகிறார்.
2006-ல் காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற பாலகிருஷ்ணசாமிக்கு நகர் மன்றத் தலைவர் பொறுப்பு என திமுக கூட்டணியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கவுன்சிலர்களை தனக்கு ஆதரவாகத் திரட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திகா கரிக்கோல்ராஜ் நகர்மன்றத் தலைவரானார்.
இந்நிலையில், கடந்தமுறை போல் இந்த முறையும் நகர்மன்றத் தலைவர் பதவியைப் பிடிக்க கார்த்திகா கரிக்கோல்ராஜ் களம் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT