Published : 05 Feb 2022 10:05 AM
Last Updated : 05 Feb 2022 10:05 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகளை பொது பார்வையாளர்கள் ஆய்வு: மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை

அரக்கோணம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படும் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் வளர்மதி நேற்று ஆய்வு செய்தார். அருகில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி., டாக்டர் தீபா சத்யன் உள்ளிட்டோர்.

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளை பொது பார்வையாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் என 4 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளன. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம் என 6 நகராட்சிகள், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப் பாக்கம், அம்மூர், விளாப்பாக்கம், திமிரி, கலவை என மொத்தம் 8 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறவுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் எந்தவித முறைகேடும் இல்லாமல் இருக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொது பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளராக திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். தேர்தல் தொடர்பான புகார்களை பொது பார்வையாளரிடம் வேலூர் அண்ணா சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அறை எண் 2-ல் தினசரி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். அவரது செல்போன் எண் 94428-03941 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பொது பார்வையாளராக வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் தொடர்பாக பொது பார்வையாளரை 84382-00771 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுக்கள் பெறும் நிகழ்வுகளை பொது பார்வையாளர் பார்வையிட்டார். தொடர்ந்து, அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் பொது பார்வையாளர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x