Published : 04 Feb 2022 09:08 AM
Last Updated : 04 Feb 2022 09:08 AM

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த உடனேயே குழந்தை உயிரிழப்பு: செவிலியர்களை கண்டித்து சாலை மறியல்

குழந்தை இறப்புக்கான காரணம் தெரிவிக்காததைக் கண்டித்து குமாரபாளையம் அரசு மருத்துவமனை எதிரில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

குழந்தை இறந்தது தொடர்பாக முறையாக தகவல் அளிக்காத செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்லமுத்து (28). இவரது மனைவி துர்கா (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த துர்கா நேற்று முன்தினம் காலை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்து உடனே இறந்துவிட்டதாக மருத்துவமனை செவிலியர்கள் கூறியுள்ளனர்.

மேலும், துர்காவின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து செவிலியர்களிடம் துர்காவின் உறவினர்கள் தகவல் கேட்டுள்ளனர். எனினும், முறையான பதில் அளிக்கவில்லை.

இதில் அதிருப்தியடைந்த துர்காவின் உறவினர்கள், அலட்சியமாக பேசிய செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமாரபாளையம் அரசு மருத்துவமனை எதிரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களை சமரசம் செய்தனர். இதையடுத்து இறந்த குழந்தையின் பிரேதத்தை பெற்றுக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x