Published : 04 Feb 2022 08:18 AM
Last Updated : 04 Feb 2022 08:18 AM
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காவல் துறையினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றஞ் சாட்டி அதிமுகவினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜோலார்பேட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சி களுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாகநடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
திமுக, அதிமுக, பாஜக,பாமக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மனுதாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்ந்து 5 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவுரை வழங்கியுள்ளது.
ஆனால், மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை ஆளும் கட்சியான திமுக பின்பற்றுவது இல்லை. அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக போன்ற எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை காவல் துறையினரும், தேர்தல் நடத்தும் அலுவலர்களும் விதிப்பதாக பரவலாக குற்றச்சாட்டு மாநிலம் முழுவதும் எழுந்துள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை நேற்று காலை தாக்கல் செய்த செய்ய வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பில் இருந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான காவல் துறை யினர் அவர்களை தடுத்து நிறுத்தி, 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். மற்றவர்கள் 100 மீட்டர் தொலைவுக்கு செல்லவேண்டும் என எச்சரித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் விதி என்பதால் அதிமுகவினரும் காவல் துறையினரின் அறிவுரையை பின்பற்றினர்.
இந்நிலையில், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி தலைமையில் திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய நேற்று புடைசூழ வந்தனர். அவர்களை, காவல் துறையினர் எந்த நிபந்தனையின்றி வேட்பாளர்கள் உட்பட அனைவரையும் அலுவல கத்துக்குள் அனுமதித்தனர். மனு தாக்கல் செய்ய வந்த திமுக எம்எல்ஏ தேவராஜி உட்பட பலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதைக்கண்ட அதிமுகவினர்ஆத்திரமடைந்து பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த காவல் துறையினர், ஆளும் கட்சி என்பதாலும், எம்எல்ஏ உடன் வந்ததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என சமாளித்தனர்.
இதை ஏற்க விரும்பாத அதிமுகவினர் இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அமர் குஷ்வாஹாவிடம் முறையாக புகார் அளிப்போம் என எச்சரித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானதை தொடர்ந்து, ஜோலார்பேட்டை காவல் துறையினர் மற்றும் திமுக கட்சியினர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT