Published : 31 Jan 2022 09:51 AM
Last Updated : 31 Jan 2022 09:51 AM
சென்னை: தஞ்சாவூரில் சிறுபான்மையினர் பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மணி தற்கொலை வழக்கில் விசாரணை அமைப்புகள் அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர்.
ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறும்படி வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். மேலும், இதை வலியுறுத்தி பாஜகவினர், இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்தப் பேட்டியிலிருந்து:
இந்த விவகாரத்தில் விடுதி வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நியாயமாக இல்லை என்று எதைவைத்துச் சொல்கிறீர்கள்?
தஞ்சை போலீஸார் ஆரம்பத்திலிருந்தே இதை மூடி மறைக்கின்றனர். அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். வழக்கு விசாரணையில் உள்ளபோது போலீஸார் எப்படி சுயமாக கருத்துகளைத் தெரிவித்தனர் என்பது எனக்குப் புரியவில்லை. மதமாற்றம் நடைபெற்றதாக யாரேனும் புகார் கூறினால் அதைப்பற்றியல்லவா விசாரிக்க வேண்டும். ஆனால் முதல் நாளில் இருந்தே அத்தகைய புகாரை விசாரணை அமைப்புகள் மறுத்து வருவது ஏன்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் மற்றவர்களும் உடனடியாக கோதாவில் குதித்து விசாரணைக்கு அரசியல் சாயம் பூசி உள்ளனர்.
போலீஸார் விசாரணை நடத்தும்போது, ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கு நீங்கள் அந்த வீடியோவை வெளியிட்டது சரியா? அதற்கு என்ன அவசியம் இருக்கிறது?
எனக்கு அந்த மாணவி ஜனவரி 19ஆம் தேதி இறந்த பின்னர்தான் விஷயமே தெரியும். நான் உள்ளூர்காரர்களிடம் பேசினேன். அவர்கள் எனக்கு அந்த வீடியோவை அனுப்பினார்கள். அதில் ஏதோ விடுபட்டிருப்பதுபோல் எனக்கு தோன்றியது. மேலும் அந்த நேரத்தில் வழக்கு திசை திரும்பி அதில் கண், மூக்கு, காது வைக்கப்பட்டபோது வீடியோவை ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியம் உண்டானது. ஒரு பொறுப்பான நபராக நான் அந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தேன். அதில் அரசியல் ஏதுமில்லை. பாஜக இந்த விஷயத்தைக் கையில் எடுத்தப் பின்னர் தான், அழுத்தம் ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமே அந்த வீடியோ ஏற்கத்தக்க ஆதாரம் என்று கூறியுள்ளது.
நீங்கள் அந்த வீடியோவை எடிட் செய்ததாக புகார் நிலவுகிறதே?
அதை யாரும் எடிட் செய்யவில்லை. விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரத்திலும் நாங்கள் கொடுத்துள்ள ஆதாரத்திலும் இருக்கும் குரல் ஒன்றே. அந்த வீடியோ, ஆடியோ எதுவும் எடிட் செய்யப்படவில்லை.
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்கு பாஜக இழுக்கு ஏற்படுத்த முயல்கிறதா...
நான் என் ஆரம்பக்காலத்தில் கிறிஸ்துவப் பள்ளியில் தான் படித்தேன். தஞ்சை மாணவி விவகாரத்தில் யாரோ சில தனிநபர்கள் தவறு செய்துள்ளனர். அவர்களைத் தண்டிக்க வேண்டும். மற்றபடி மாநிலத்தின் வளர்ச்சியிலும் சரி, தேசத்தின் வளர்ச்சியிலும் சரி சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த வழக்கு பற்றி இதுவரை உண்மை நிலவரத்தை யாரும் சொல்லவில்லை. விசாரணை அமைப்புகள் தான் இந்த வழக்கிற்கு மதச்சாயம் கொடுத்துள்ளன என நான் நினைக்கிறேன். அரசியல்வாதிகள் போல் விசாரணை அமைப்புகள் நடந்து கொண்டுள்ளன.
ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக விசாரணையை விமர்சிப்பது சரி என நினைக்கிறீர்களா?
அந்தச் சிறுமி நடந்ததை முழுவதுமாக தெரிவிக்கவில்லை. அந்தச் சிறுமியின் தாய்க்கே 8 நாட்களுக்குப் பின்னரே அவர் விஷம் அருந்தியது தெரியவந்தது. அதன் பின்னர் பள்ளி நிர்வாகம் சமரசம் பேசி பணம் கொடுக்கவும், வேறு மருத்துவமனைக்கு மாற்ற உதவி செய்யவும் முன்வந்துள்ளது. இந்த வழக்கில் பிரதான குற்றவாளி எனக் கருதப்படுபவர் கைதாகியுள்ளார். அதன்பின்னர் தான் மதமாற்றப் பிரச்சினையே தெரியவந்தது. இங்கு பிரச்சினை என்னவென்றால் அந்தச் சிறுமி ஏன் துன்புறுத்தப்பட்டார்? போலீஸார் ஏன் மதமாற்றம் கோணத்தில் விசாரிக்க மறுக்கின்றனர் என்பதே?
தஞ்சை சிறுமிக்கு சித்தி கொடுமை இருந்ததாகக் கூறுகின்றனர். அதைப் பற்றி நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?
எல்லா கோணத்திலும் விசாரணை நடக்க வேண்டும். ஆனால் போலீஸார் தோதாக சிலவற்றை மூடிவிட்டனர். பள்ளிக்கு தொடர்பில்லை எனக் கூறுகிறார்கள். மாவட்ட எஸ்.பி. மதமாற்றம் நெருக்கடியே இல்லை எனக் கூறுகிறார். காவல்துறை மட்டும் இந்த வழக்கில் அனைத்துக் கோணங்களிலும் விசாரிக்கப்படும் என்று கூறியிருந்தால், நாங்கள் இதைக் கையில் எடுத்திருக்கவே மாட்டோம்.
மத உணர்வுகளைத் தூண்டி பாஜக அழிவிற்கான அரசியலை முன்னெடுப்பதாக முதல்வர் கூறுகிறாரே...
முதல்வருக்கு கலக்கம் வந்துவிட்டது. அவரது அறிக்கையே அதை உணர்த்துகிறது. முன்பெல்லாம் பாஜக பற்றி பேசாத அவர் இப்போது பேசுகிறார். தமிழக அரசியலில் பாஜக செல்வாக்கு பெறுவதை அவர் அறிந்திருக்கிறார்.
சிறுபான்மையினர் அல்லாதோர் நடத்தும் பள்ளிகளில் பெண்களுக்கு நேர்ந்த வன்முறை பற்றி பாஜக பேசாதது ஏன்?
அது தவறு. நாங்கள் தான் முதலில் எதிர்வினையாற்றினோம். கோவையில் ஓர் இந்துப் பள்ளியில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து பாஜக பெரியளவில் போராட்டம் நடத்தியது. யார் செய்தாலும் குற்றம் குற்றமே. ஒரு குற்றம் நடக்கும்போது அதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மதம் பற்றிய விவரம் அவசியமில்லை. நான் இப்போதும் கூட தஞ்சைப் பள்ளியையே மூட வேண்டும் என்று சொல்லவில்லையே..
இவ்வாறு அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பேட்டி: சி.ஜெய்சங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT