Last Updated : 31 Jan, 2022 09:55 AM

 

Published : 31 Jan 2022 09:55 AM
Last Updated : 31 Jan 2022 09:55 AM

காலநிலை மாற்றத்தால் தற்போது பல இடங்களில் பரவலாக ஏற்பட்டு வரும் விஷக்காய்ச்சலை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும்: சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் நம்பிக்கை

திருப்பத்தூர்

பல இடங்களில் பரவலாக காணப் படும் விஷக்காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட பிரச்சினை களுக்கு சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சீதோஷ்ண நிலை மாறும்போது மனிதர்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. உலகில் காலத்துக்கு ஏற்ப பருவநிலை மாறும்போது, காய்ச்சல், விஷக்காய்ச்சல், சளி தொந்தரவு, இருமல், உடல் சோர்வு மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்பட்டு, மனிதர்களை வாட்டி எடுக்கும். தற்போது, கரோனா பரவல் இருப்பதால் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்படும் போது கரோனாவால் ஏற்படும் காய்ச்சலா? அல்லது சாதாரண காய்ச்சலா? என தெரிந்துக்கொள்ளவே ஒரு சில நாட்கள் ஆகிவிடுகின்றன.

காலநிலை மாற்றத்தால் தற்போது பல இடங்களில் பரவலாகஏற்பட்டு வரும் காய்ச்சல், கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளை அச்சுறுத்தி வருகிறது.

இருப்பினும், விஷக்காய்ச்சல் ஆகட்டும், சாதாரண காய்ச்சல் ஆகட்டும் வீட்டில் உள்ள சில மூலிகைப்பொருட்கள் மற்றும் சித்த மருந்துகளால் அதை எளிதில் குணப்படுத்த முடியும் என சித்த மருத்துவர்கள் நம்பிக்கையை ஊட்டுகின்றனர். தற்போது ஏற்பட்டு வரும் காய்ச்சலை சித்த மருத்துவம்மூலம் நம்மை, நாமே குணப்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

இது குறித்து வேலூர் புற்று மகரிஷி சித்த மருத்துவ மையத்தின் தலைமை மருத்துவர் டி.பாஸ்கரன், ‘ இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, "தற்போது சீதோஷ்ண நிலை யாருமே எதிர்பாராத வகையில் மாறி, மாறி உள்ளது. காலம் தப்பி மழை பெய்கிறது. இதனால் பெரும்பாலானவர்கள் சளி, இருமல், காய்ச்சல், தொடர் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர்.

பல இடங்களில் விஷக்காய்ச் சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வகை பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவம் மூலம் எளிய முறையில் தீர்வு காணலாம். இது போன்ற காய்ச்சலை கண்டு யாரும் பயப்படவேண்டாம். சளி, தொண்டை கரகரப்பு மற்றும் இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் ‘தாளிசாதி வடக மாத்திரை’, ‘நிலவேம்பு குடிநீர்’ ஆகியவை உட்கொள்ளலாம்.

இவை காய்ச்சலை கட்டுப்படுத் தும். மேலும், விஷக்காய்ச்சல், விடாத காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வேர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிலவேம்பு குடிநீரை காலை, மாலை என இரு வேளையும் எடுத்துக்கொள்ளலாம்.

வாந்தியை தடுக்க ‘ஏலாதி சூரணம் மாத்திரை’, உடல்சோர்வு நீக்க ‘அமுக்ரா சூரணம் மாத்திரை’, சளி, இருமலை போக்க ‘ஆடாதோடை மணப்பாகு’ மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். தவிர, மிளகு கசாயம் தயாரித்து அருந்தலாம். 250 மில்லி லிட்டர் தண்ணீரில் 5 கிராம் மிளகு சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து 60 மில்லி லிட்டராக ஆனதும் அதை பருகலாம்.

இஞ்சி, லவங்கம், துளசி, எலுமிச்சை சாறு சேர்த்து தினசரி தேநீர் போல பருகலாம். இனிப்புக்கு தேன் அல்லது பனை வெல்லம் சேர்த்து பருகலாம். இந்த வகை தேநீர் சளி, இருமலை போக்கும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் ‘சி’ சத்தும் உள்ளது. தற்போதுள்ள சூழலில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வருகிறது.

சித்த மருத்துவர் பாஸ்கரன்

இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இது போன்ற பிரச்சினைகள் அவ்வப்போது வருகிறது. இந்த சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு தேனுடன் ‘திரி கடும் சூரணத்தை’ கலந்து கொடுக்க வேண்டும். இது போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்தவம் சிறந்த தீர்வாகும்.

அமுக்ரா சூரணம் மாத்திரை கள், தாளிசாதி வடகம், திரிபாலா மாத்திரை ஆகியவற்றை சித்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும், தூதுவளை துவையல், திப்பிலி ரசாயனமும் எடுத்துக் கொள்ளலாம். இது நுரையீரலை பாதுகாப்பாகவும், பலமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

தற்போதை சூழ்நிலையில், முதியவர்கள் மிகவும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி கஞ்சி, மூலிகை துவையல்கள் எடுத்துக்கொள்ளலாம். குளிர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆட்டுக்கால் சூப் உட்பட சூப்பு வகைகளையும் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளில் படிகாரம் மற்றும் மஞ்சள் கலந்த நீரை தெளிக்கலாம். வீட்டுக்குள் குங்கிலிய புகையை போடலாம். எப்போதும் நாம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

மிளகு, மஞ்சள் சேர்த்த பாலை பருகுவது சளி தொல்லைக்கு சிறந்த தீர்வாகும். இதனோடு, பஞ்சதீப லேகியம் எடுத்துக்கொள்ளும் போது அது பசியை தூண்டும். சளி, இருமலை போக்கும்.

எந்த வகை உடல் பிரச்சினைகளாக இருந்தாலும் நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் அவற்றை சரி செய்ய வழிகள் உள்ளன. தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா மற்றும் ஒமைக்ரானை கூட சித்த மருத்துவம் மூலம் எளிதில் வெற்றி கொள்ளலாம். நம் சமையல் அறையில் உள்ள சமையலுக்கு பயன்படும் மூலிகைகளை கொண்டே சளியையும், காய்ச்சலையும் நம்மால் எளிதில் விரட்ட முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x