Published : 27 Jan 2022 09:51 AM
Last Updated : 27 Jan 2022 09:51 AM

விருதுநகர் அருகே அழகாபுரியில் 102-வது பிறந்தநாள் கொண்டாடிய முதியவர்

குடும்பத்தினருடன் முதியவர் சின்னராஜ்.

விருதுநகர்

தினந்தோறும் அதிகாலை நடை பயிற்சியும், சைவ உணவுமே தனது ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம் என 102-வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர் கூறினார்.

விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் சின்னராஜ். நேற்று தனது வீட்டில் 102-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். இவருக்கு பாலாமணி(73), வசந்தகுமாரி(71), திலகவதி (68), மேனகா (65) ஆகிய மகள்களும் அழகர்சாமி (62) என்ற மகனும் உள்ளனர். விருதுநகர் தந்திமரத்தெருவில் வசித்து வந்த சின்னராஜ், தந்தையின் தொழிலான பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். அப்போது வியாபார வளர்ச்சிக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். முன்னாள் அமைச்சர் கக்கனுடன் நெருங்கிப் பழகியவர். அப்போதைய சட்டப்பேரவைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டவர்.

பின்னர், விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியில் தங்கி விவசாயம் செய்து வந்தார். புத்தகம், பத்திரிகை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட முதியவர் சின்னராஜ், தற்போது வரை அதை தொடர்ந்து வருகிறார். உறவுகளுக்கு கடிதம் எழுதும் பழக்கத்தையும் வழக்கமாகக் கொண் டுள்ளார். மேலும், தனக்கான அனைத்து வேலைகளையும் தானே செய்து கொள்கிறார்.

இதுகுறித்து முதியவர் சின்னராஜ் கூறுகையில், அசைவ உணவு சாப்பிடுவதே இல்லை. எப்போதுமே கீரை, காய்கறிகளுடன் கூடிய சைவ உணவுதான் உட்கொள்வேன். அதோடு, அதிகாலையில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வேன். இதுதான் எனது ஆரோக்கியத்துக்குக் காரணம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x