Published : 26 Jan 2022 11:11 AM
Last Updated : 26 Jan 2022 11:11 AM

தோல்வி பயம் வந்துவிட்டதால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க திமுக முயற்சி: முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல்

‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முயற்சிக்கிறது',என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான தங்கமணி பங்கேற்று மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது கரோனா காலக்கட்டம் என்பதால் அந்தந்த மாவட்ட அதிமுக தலைமை அலுவலகங்களில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை நடத்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தினர். அதன்படி நாமக்கலில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கடைகளை மூடினார். தொடர்ந்து பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றபோது 500 டாஸ்மாக் கடைகளை மூடினார்.

பள்ளிபாளையம் நகராட்சியில் இதுவரை டாஸ்மாக் கடைகள் இருந்ததில்லை. தற்போது இரண்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திமுக அரசு சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் அவர்களே நீதிமன்றம் சென்று தேர்தலை தள்ளி வைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர், என்றார். பேட்டியின்போது, முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x