Published : 25 Jan 2022 12:06 PM
Last Updated : 25 Jan 2022 12:06 PM
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கோரி 2 இடங்களில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு பல்வேறு வார்டுகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர், தெரு மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு ஆரீப் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பத்தூர் - ஏரிக்கரை சாலை யில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஆரீப்நகர் 32-வது வார்டில் 1,200 வீடுகள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் ஒரு சில தெருக்களில் கழிவுநீர் கால்வாய் இதுவரைஅமைக்கவில்லை. இதனால், கழிவுநீர் தெருக்களில் தேங்கியுள்ளது. இதனால், நாங்கள் துர்நாற்றுத்து டன் வசித்து வருகிறோம்.
குழந்தைகளுக்கு, மலேரியா, டெங்கு, விஷகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது மட்டுமின்றி தெருவிளக்குகளும் இல்லை.குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் சீரமைக்கப்படவில்லை. பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் இன்னுமும் சீரமைக்கப்படவில்லை. தெரு முழுவதும் குப்பைக்கழிவுகள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் பன்றிகளும், நாய்களும் அதிகரித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் தவறாமல் செலுத்தி வருகிறோம். காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு மாதக்கணக்கில் ஆகிறது. ஆனால், அதற்கும் சேர்த்து வரியை வசூலிக்கின்றனர். மக்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதியும் நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை. இது குறித்து நகராட்சி ஆணையாளர், துப்புரவு ஆய்வாளர்களிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கான முடிவு தெரியும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம்’’ என்றனர்.
இதைத்தொடர்ந்து, திருப்பத் தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதியளித்தனர். இதனையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதேபோல, நகராட்சிக்கு உட்பட்ட 34-வது வார்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பசுமைநகர் பகுதியில் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குப்பைக்கழிவுகளும், கோழி இறைச்சிக் கழிவுகளும் கலந்து வந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அங்கு வந்த நகர காவல் துறையினர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை அப்பகுதி மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருப்பத்தூர் நகராட்சியில் 2 இடங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT