Published : 23 Jan 2022 08:29 AM
Last Updated : 23 Jan 2022 08:29 AM

கோவை குனியமுத்தூர் அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை டாப்சிலிப் வனத்தில் விடுவிப்பு

கோவை குனியமுத்தூர் பி.கே.புதூரில் கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தை. படம்:ஜெ.மனோகரன்

கோவை/பொள்ளாச்சி

கோவை மதுக்கரை வனச்சரகத் துக்குட்பட்ட பிள்ளையார்புரம், கோவைப்புதூர், குனியமுத்தூர், பி.கே.புதூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அருகே அண்மையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பி.கே.புதூரில்உள்ள தனியார் குடோனின் உள்ளேசிறுத்தை இருந்தது கடந்த 17-ம் தேதி காலை தெரியவந்தது. பின்னர், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் எஸ்.ராமசுப்பிரமணியன் மேற்பார்வையில், மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த குடோனை விட்டு சிறுத்தை வெளியேற முடியாதபடி, சுற்றிலும் வலைகளைக் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. குடோன் நுழைவுவாயில்களில் இரு கூண்டுகள் வைக்கப்பட்டன. மொத்தம் 8 கேமராக்களை பொருத்தி, கணினி திரைமூலம் 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கூண்டில் இறைச்சியை வைத்திருந்தும் 3 நாட்களாக அதை உண்ண உள்ளே வராத சிறுத்தை, நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் கூண்டுக்குள் சிக்கியது.

சிக்கியது எப்படி?

எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக சிறுத்தையை பிடித்தது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: பொதுவாக கூண்டின் கடைசியில் உள்ள பெடல் மீது கால் வைக்கும்போது ஷட்டர் தானாக மூடிக்கொள்ளும். நேற்றுமுன்தினம் கூண்டின் முன்பகுதியில் கால்வைத்த சிறுத்தை பெடல் வரை உள்ளே வராமல் திரும்பிச் சென்றுவிட்டது. பசியோடு இருந்த சிறுத்தை மீண்டும் எப்படியும் கூண்டுக்குள் வரும் என காத்திருந்தோம்.

இந்நிலையில் தாகத்தை தணிக்க தண்ணீர் அருந்த வந்தது. சிறுத்தை கூண்டுக்குள் நுழையும்போது பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பார்த்துக்கொண்டே இருந்தோம். வால் உட்பட முழு உடல் பாகங்களும் கூண்டுக்குள் சென்றதை கேமரா பதிவில் உறுதிசெய்தோம். அதன் கால்பட்டு ஷட்டர் தானாக மூடும்வரை காத்திருக்காமல், உடனடியாக கூண்டின் ஷட்டரை தொலைவிலிருந்து கயிறு மூலம் இழுத்து மூடினோம். இதில், சிறுத்தை அகப்பட்டுவிட்டது. எதுவும் சாப்பிடாமல் 5 நாட்கள் பசியோடு இருந்ததால் கூண்டில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ மாட்டிறைச்சி, ரத்தம், 2 கிலோ கோழி இறைச்சியை முழுவதுமாக உட்கொண்டுவிட்டது. பின்னர், போதிய இரை, தண்ணீர் ஆகியவை கிடைக்கும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, டாப்சிலிப், ஆனைகுந்தி அடர்வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறுத்தை விடுவிக்கப்பட்டது.

சிறுத்தையை பிடிக்கும் இந்த பணியில் உதவி வனப்பாது காவலர் தினேஷ்குமார், வனச்சரக அலுவலர்கள் சந்தியா, அருண்குமார், ஜெயச்சந்திரன், மாவட்ட வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினரின் பங்கு குறிப்பிடத்தக் கது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x