Published : 22 Jan 2022 10:59 AM
Last Updated : 22 Jan 2022 10:59 AM
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 81.50 மீட்டர் நீளம் கொண்ட ராட்சதகாற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி வஉசி துறைமுகம் காற்றாலை இறகு மற்றும் உதிரிப்பாகங்கள் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 2,898 காற்றாலை இறகுகளும், 1,248 காற்றாலை கோபுரங்களும் கையாளப்பட்டுள்ளன.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள இட வசதிகள், 8 வழி துறைமுக இணைப்புச் சாலை, சீரான தேசிய நெடுஞ்சாலை இணைப்பு போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த காற்றாலை இறகுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், வஉசி துறைமுகம் வழியாக அவற்றை ஏற்றுமதி செய்கின்றன.
வஉசி துறைமுகத்தில் 81.50 மீட்டர் நீளமும், 25 டன் எடையும் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலை இறகுகள் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதற்காக, சென்னை அருகே யுள்ள வெங்கலில் இருந்து பிரத்யேக லாரிகள் மூலம் தூத்துக் குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
துறைமுகத்தில் உள்ள அதிநவீன பளுதூக்கிகள் மூலம் இந்த காற்றாலை இறகுகள் கப்பலில் ஏற்றப்பட்டன. 142.8 மீட்டர் நீளம் கொண்ட எம்.ஒய்.எஸ்.டெஸ்நேவா என்ற கப்பலில் 81.50 மீட்டர் நீளம் கொண்ட 6 காற்றாலை இறகுகளும், 77.10 மீட்டர் நீளம் கொண்ட12 இறகுகளும் ஏற்றப்பட்டன. தொடர்ந்து கப்பல் நேற்று முன்தினம் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT