Published : 19 Jan 2022 09:57 AM
Last Updated : 19 Jan 2022 09:57 AM
சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நேற்று நகரத்தாரின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஒரே சமயத்தில் 917 பெண் கள் பொங்கல் வைத்தனர்.
நாட்டரசன்கோட்டை பகுதியில் அதிகளவில் நகரத்தார் வசிக் கின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து முதல் செவ்வாய்க்கிழமை செவ்வாய் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றனர்.
இதற்காக திருமணம் முடிந்த நகரத்தாரின் குடும்பத்தினரை ஒரு புள்ளியாகக் கணக்கிடுவர். அவர்களது பெயரை சீட்டில் எழுதி வெள்ளிப் பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய் கின்றனர். முதல் சீட்டில் வரும் குடும்பத்தினர் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன்பாக முதல் பானையாக பொங்கல் வைப்பர்.
அதன்படி நேற்று மாலை நடந்த பொங்கல் விழாவில் முதல் சீட்டில் தேர்வான குடும்பத்தினர் மண் பானையில் பொங்கல் வைத்தனர். அதைத்தொடர்ந்து 917 நகரத்தார் குடும்பப் பெண்கள் வெண்கலம், சில்வர் பானைகளில் பொங்கல் வைத்தனர். மேலும் மற்ற சமூகத்தைச் சேர்ந்த 150-க் கும் மேற்பட்டோர் நகரத்தாருக்கு அருகிலேயே தனி வரிசையில் பொங்கல் வைத்தனர். அனைவரும் வெண் பொங்கல் வைத்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் இந்த விழாவில் உறவினர்கள் நலன் விசாரித்து வரன் பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பங்கேற்கும் இவ்விழாவில், கரோனா காரணமாக இந்தாண்டு அவர்கள் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து நாட்டரசன் கோட்டை நகரத்தார் கூறியதாவது:
200 ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் பொங்கல் கொண்டாடி வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு முன்பு 400 புள்ளிகள் தான் இருந் தன. தற்போது 900 புள்ளிகளுக்கு மேல் உள்ளது.
எங்களில் பலர், வெளியூர், வெளிநாடுகளிலும் வசிக்கின்றனர். அவர்கள் எந்த விழாவுக்கு வரா விட்டாலும், செவ்வாய் பொங் கலுக்கு வந்துவிடுவர். இந்த விழா உறவினர்களை ஒன்று சேர்க்கும் விழா என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT