Published : 12 Jan 2022 10:32 AM
Last Updated : 12 Jan 2022 10:32 AM

‘பொங்கல் பரிசுடன் மண்பானையை அரசு இலவசமாக தர வேண்டும்!’: புதுச்சேரி ஆளுநரிடம் கோரிக்கை வைத்த மண்பாண்ட தொழிலாளர்கள்

உறுவையாறு பகுதியில் மண்பானை முனையும் களத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி கிராமப் பகுதிகளில் மண்பானை அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. சீசனுக்கு ஏற்ப அகல் விளக்கு, சமையல் சட்டி, பொங்கல் பானை, அடுப்பு உள்ளிட்ட பொருட்களும் மண்பாண்ட தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தொடர் மழையால் தற்போது மண்ணுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பண்ருட்டி உள்பட தமிழக பகுதிகளில் இருந்து கூடுதல் விலைக்கு மண்ணை வாங்கி வந்து, பொங்கல் பானை செய்துள்ளனர்.

“மக்களின் ஆர்வத்தால் கடந்த சில ஆண்டுகளில் பானை விற்பனை அதிகரித்து வந்தது. கரோனா தொற்றால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு பெய்த மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு சற்று முன்னதாகவே மண் பானைகள் தயாரிக்கும் பணியை தொடங்கினோம். ஆனாலும், ஜனவரி தொடக்கத்தில் பெய்த மழையும் சற்று பாதிப்பை ஏற்படுத்தியது.” என்று கூறுகின்றனர் இதன் உற்பத்தியாளர்கள்.

மக்களுக்கு ஆளுநர் தமிழிசையின் அன்பு வேண்டுகோள்

புதுச்சேரி உறுவையாறு பகுதியில் பொங்கல் பானைகள் செய்யும் பகுதிக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமாருடன் சென்ற ஆளுநர் தமிழிசை, பானைகள் முனைவதை பார்வையிட்டார்.

“நம் வீட்டில் என்ன உயர் தர உலோகங்களில் பானைகள் வைத்திருந்தாலும், மண்பானைகளை வாங்கி பொங்கல் வைக்க வேண்டும். மண்பானையில் பொங்கலிடுவது நமது பாரம்பரியம். பொங்கல் நன்னாளில் நாம் அனைவரும் மண்பானையில் பொங்கலிடுவோம். இந்த தொழிலாளர்கள் மண் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தனர். மண்ணை மானியத்தில் தர ஏற்பாடு செய்வோம்"என்று அப்போது ஆளுநர் குறிப்பிட்டார்.

‘பொங்கல் பானையை அரசே இலவசமாக கொள்முதல் செய்து ரேஷன்கார்டுதாரர்களுக்கு தர கோருகிறார்களே!’ என்று ஆளுநரிடம் கேட்டதற்கு, "இது தொடர்பான கொள்கை முடிவை அரசிடம் கலந்து ஆலோசிக்கப்படும்; நிச்சயம் பரிசீலிப்போம். "என்றார். "முன்பெல்லாம் 11 படி பொங்கும் பானையெல்லாம் செய்வோம். தற்போது 1 படி முதல் 5 படி பானைகள் வரை மட்டுமே செய்கிறோம்.

அதிகமாக இரண்டு படிக்குள்தான் விற்பனையாகிறது. பாரம்பரியத் தொழிலில் ஈடுபட எங்கள் பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதில்லை. பெரிய அளவு இதில் வருமானம் இல்லாததும் அவர்கள் இதை விட்டு விலகிச் செல்வதற்கு ஒரு காரணம்.

அரசு எங்களை கண்டு கொள்வதில்லை. அழியும் சூழலில் உள்ள கலைநயமிக்க இத்தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசே பானைகளை கொள்முதல் செய்து ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் மண் பானையும் தர ஏற்பாடு செய்தால் நிச்சயம் எங்களுக்கு உதவியாக இருக்கும்" என்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x