Published : 09 Jan 2022 07:06 AM
Last Updated : 09 Jan 2022 07:06 AM

ஜன. 12-ல் பிரதமர் மோடியின் விருதுநகர் வருகை ரத்து: மருத்துவ கல்லூரிகளை காணொலி மூலம் திறக்க திட்டம்

விருதுநகர்

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடியின் விருதுநகர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா ஜனவரி 12-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விழா விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியைத் திறந்துவைப்பதோடு, அங்கிருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள மற்ற 10 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும் திறந்துவைப்பதாக இருந்தது.

இதற்கான முன்னேற்பாடுகள், விருதுநகரில் கடந்த 15 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து செல்வதற்கு வசதியாக, விருதுநகரில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக தேர்வுசெய்யப்பட்ட இடத்தில் 3 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மதுரை- விருதுநகர் இடையே ஹெலிகாப்டரை இயக்குவதற்கான வழித்தடம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குதளம் குறித்து கடந்த 2நாட்களுக்கு முன்பு விமானப்படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக திடீரென பிரதமரின் விருதுநகர் வருகை நேற்று ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கும் பணி, புதிதாக சாலை அமைக்கும் பணி போன்றவை நிறுத்தப்பட்டு இதற்காக குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீஸாரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனாலும், குறிப்பிட்டபடி இம்மாதம் 12-ம் தேதி தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் எனவும், டெல்லியில் இருந்தவாறு பிரதமரும், சென்னையில் இருந்தவாறு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளதாக மருத்துவத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x