Published : 08 Jan 2022 10:55 AM
Last Updated : 08 Jan 2022 10:55 AM

திருக்குறளின் மகிமை பாதுகாக்கப்பட வேண்டும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

கோவை

திருக்குறளின் மகிமை பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிதெரிவித்தார்.

குறள் மலைச்சங்கம் மற்றும்  கிருஷ்ணா கல்விக் குழுமம் சார்பில் ‘உலகத் திருக்குறள் மாநாடு-2022' கோவையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில்  கிருஷ்ணா கல்விக் குழும நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி வரவேற்றார்.குறள் மலைச்சங்கத்தின் தலைவர் பி.ரவிக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மாநாட்டுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்துப் பேசியதாவது:

ஒரு மனிதன் எவ்வாறு முறையாக தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை திருக்குறள் கூறுகிறது. நாம்நல்ல மனிதராக வாழ நாள்தோறும் திருக்குறளைப் படித்து அதனை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு குறளிலும் உள்ள ஏழு வார்த்தைகளையும் புரிந்து படித்தால் வாழ்வில் அனைவரும் போற்றும் நிலையை அடைய முடியும். திருக்குறளின் மகிமை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், சிறந்த தமிழ் மாணாக்கர் என்ற சான்றிதழை 10 மாணவர்களுக்கு ஆளுநர் வழங்கினார். தொடர்ந்து 5 தமிழ் சான்றோர்களுக்கான விருதுகளை ஆளுநர் வழங்கி கவுரவித்தார். அதன்படி, குறள் மலை பெருநீதிப் பெருமகனார் விருது சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரனுக்கும், குறள் மலை வாழ்நாள்சாதனையாளர் விருது கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் நல்ல ஜி.பழனிசாமிக்கும், குறள் மலை மனுநீதிச் சோழன் விருது கோவை மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மனுநீதி மாணிக்கத்துக்கும், குறள் மலை சிறந்த கல்வியாளர் விருது கோவை எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனத்தின் தலைவர் மணிமேகலை மோகனுக்கும்வழங்கப்பட்டது. குறள் மலைச்சங்கத்தின் ‘கல்வெட்டில் திருக்குறள் 6'என்ற நூல் வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x