Published : 04 Jan 2022 10:34 AM
Last Updated : 04 Jan 2022 10:34 AM

ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் தருவோம்: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

சேலம்

ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அழுத்தம் தருவோம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

சேலம் மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (3-ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலம் மத்திய சிறையில் 1,351 தடுப்பு கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகளாக இருக்கிறார்கள். மேலும், பெண்கள் சிறையில் 78 பேர் உள்ளனர். சேலம் மத்திய சிறைக்கு வரக்கூடிய கைதிகள் அனைவருக்கும் மாவட்ட சிறையிலேயே கரோனா தொற்று பரிசோதனை செய்து, தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். 10 நாட்களுக்கு ஒரு முறை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

சேலம் மத்திய சிறையில் தொழிற்பயிற்சி மற்றும் அடிப்படை கல்வி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டில்கள், ரொட்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் இங்கு தயார் செய்து வழங்கப்படுகிறது. மேலும், அரசு அலுவலகங்களுக்குத் தேவையான காகிதத்தால் தயார் செய்யப்பட்ட கோப்புகள் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் இப்பணியில் ஈடுபடும் கைதிகள் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.6,000 முதல் ரூ.15,000 வரை ஊதியமாக பெறுகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு பேரின் விடுதலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தேவையில்லை. ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்து விசாரணைக்கு வரும் போது, உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அழுத்தம் தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, சேலம் ஆட்சியர் கார்மேகம், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x