Published : 03 Jan 2022 07:24 AM
Last Updated : 03 Jan 2022 07:24 AM
மாமல்லபுரத்தில் விடுமுறை நாளை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால், கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லாமல் இருப்பதற்காக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களை ரசிப்பதற்காகவும், கடற்கரையில் பொழுதுபோக்குக்காகவும், விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்ததால், சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கலைச் சின்ன வளாகங்களின் நுழைவு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், முகக்கவசம் அணிந்து வந்த நபர்களை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
சாலுவான் குப்பம் பகுதியில் உள்ள புலிக்குகை சிற்பங்களைக் கண்டு ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள், கடற்கரையில் திரண்டனர். இதேபோல், மாமல்லபுரத்திலும் தடுப்புகளை தாண்டி சுற்றுலா பயணிகள் கடற்கரைக்குச் சென்றனர். இவர்களை போலீஸார் வெளியேற்றினர். இதனால், சுற்றுலா பயணிகள், போலீஸார் இடையே ஆங்காங்கே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து, சுற்றுலா பயணிகள் கூறியதாவது: காலையில் கடற்கரை பகுதிக்குச் சென்ற சுற்றுலா பயணிகளை போலீஸார் தடுக்கவில்லை. பின்னர், 11 மணிக்கு மேல் கடற்கரையிலிருந்து அனைவரையும் போலீஸார் திடீரென வெளியேற்றினர். இதனால், குடும்பத்துடன் வந்த நபர்கள் மற்றும் பெண்கள் ஏமாற்றமடைந்தனர். முன்னதாக அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்றனர்.
மாமல்லபுரத்திலும் தடுப்புகளை தாண்டி சுற்றுலா பயணிகள் கடற்கரைக்குச் சென்றனர். இவர்களை போலீஸார் வெளியேற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT