Published : 01 Jan 2022 08:23 AM
Last Updated : 01 Jan 2022 08:23 AM
சேலத்தில் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநரிடம் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று கலந்துரையாடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்கான பிரதமர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 10-வது தவணை வழங்குதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பங்கு மானியத்தை வழங்குதல் உள்ளிட்டவற்றை இன்று (1-ம் தேதி) வழங்குகிறார்.இதனையொட்டி, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சார்ந்தவர்களிடம் பிரதமர் மோடி காணொலிக் காட்சிவாயிலாக, கலந்துரையாடுகிறார்.
இந்நிகழ்ச்சியில், சேலத்தை அடுத்த வீரபாண்டியில், முழுவதும் பெண்களால் நடத்தப்பட்டுவரும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சாந்தியுடன் இன்று பிரதமர்மோடி காணொலியில் கலந்துரையாடுகிறார். இந்த நிறுவனம் தமிழக அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, நபார்டு வங்கி ஆகியவற்றின் உதவியுடன் எண்ணெய் வித்துகளில் இருந்துஎண்ணெய் பிழிதல், மாவு தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் முடிவுற்ற நிதியாண்டில் ரூ.18.28 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது.
இதனிடையே, பிரதமர் நிகழ்ச்சிக்காக சேலம் வந்திருந்த மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இணைச் செயலர் ஷோமிதா பிஸ்வாஸ், சேலத்தில் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அவரிடம் பேசிய விவசாயிகள், ‘வேளாண்மை பணிகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால், மகாத்மா காந்தி ஊரகவேலை உறுதித் திட்டத்தில், வேளாண்மை பணிகளையும் இணைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, அவர் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT