Published : 01 Jan 2022 09:46 AM
Last Updated : 01 Jan 2022 09:46 AM

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது புதுச்சேரியில் கட்டாயமாகிறது

புதுச்சேரி

புதுச்சேரியில் போக்குவரத்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் அவசர கால பட்டன் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் பிப்ரவரி முதல் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 11 லட்சத்து 27 ஆயிரத்து 940 வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 14 ஆயிரத்து 481 வாகனங்கள் பொதுப் போக்குவரத்து (மஞ்சள் நிற நம்பர் பிளேட்) வாகனங்களாகும். இந்த பொதுப் போக்குவரத்து வாகனங்களான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளிவாகனங்கள், டெம்போக்கள், டாக்ஸிகள் போன்ற அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி மற்றும் அவசர கால (பேனிக்)பட்டன் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசின் நிதி ரூ.3.5 கோடி செலவில் புதுச்சேரி போக்குவரத்து துறை அலுவலக கட்டிடத்தின் மேல் தளத்தில் கண்காணிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்பு நிலையத்தை செயல்படுத்த தேவையான ‘சிஸ்டம் இன்டிகேட்டர்’ (ஆபரேட்டர்) டென்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி முதல் அடுத்த 2 ஆண்டுகள் இந்த கண்காணிப்பு நிலையத்தை கவனிப்பார். அதன்பிறகு அரசே இந்த கண்காணிப்பு நிலையத்தை பராமரிக்கும்.

மேலும், ஏற்கெனவே மத்திய அரசு வழங்கிய ரூ.3.25 கோடி நிதி இல்லாமல் தனியாக மத்திய அரசின் நிதி ரூ.1.25 கோடி பெற்று இந்த கண்காணிப்பு மையத்துக்கு தேவையான மென்பொருள் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் புதுச்சேரி அரசு சுற்றறிக்கை மூலம் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் அவசரகால பட்டன் பொருத்த ஆணை பிறப்பிக்க உள்ளது.

குறிப்பாக 2019 ஜனவரி 1 முதல் வருகின்ற வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு முன்பு இருந்த வாகனங்களில் இந்த ஜிபிஎஸ் கருவி கிடையாது. ஆகவே புதிய வாகனங்கள் பழைய வாகனங்கள் என அனைத்திலும் வரும் பிப்ரவரி முதல் ஜிபிஎஸ் கருவி மற்றும் அவசரகால பட்டன் பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.

இந்த ஜிபிஸ் கருவி மற்றும் அவசரகால பட்டன் பொருத்துவதன் மூலம் வாகனத்தில் பயணிக்கும்போது பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள், அவசர கால பட்டனை அழுத்தலாம். இந்த பட்டனை அழுத்தியவுடன் ஜிபிஎஸ் மூலமாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சென்றுவிடும்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி உதவி கிடைக்கும்.

அதுபோல் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், தவறான வழித்தடங்களில் செல்லும் வாகனங்கள் என அனைத்து விதங்களிலும் வாகனங்களை கண்காணிக்க முடியும். இதன்மூலம் தவறு செய்யும் வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள உதவும்.

இதுதொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் கூறும்போது, ‘‘ஜிபிஎஸ் கருவியின் விலை ரூ.8 ஆயிரத்தில் இருந்து கிடைக்கிறது. இதனை அந்தந்த வாகன உரிமையாளர்கள் தங்களின் சொந்த செலவிலேயே பொருத்திக் கொள்ள வேண் டும். இந்த ஜிபிஎஸ் கருவி சேட்டிலைட் சிக்னல் மூலம் தகவல் தரும்.

வாகனம் இருக்கும் இடம், இயக்கப்படும் வேகம், எங்கெல்லாம் செல்கிறது, ஓட்டுநரின் செயல்பாடு, பெண்களின் பாதுகாப்பு, வாகன விபத்து என மாநிலம் முழுவதும் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் கண்காணிக்க முடியும். இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள், காவலர்கள் மட்டுமின்றி வாகன உரிமையாளர்களும் கூட கண்காணிக்கலாம். இதன்மூலம் தவறுகளை தடுக்கலாம். பெண்களுக்கான அவசர உதவி, விபத்தில் சிக்கும் வாகனங்களை கண்டறிந்து உதவி புரிவது போன்றவைகளை எளிதாக மேற் கொள்ளலாம்.

குறிப்பாக புதுச்சேரி சாலைப் போக்கு வரத்து கழகம் (பிஆர்டிசி) வாக னங்களை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க முடியும்.

பேருந்துகள் எங்கு செல்கின்றன, எந்த நேரத்தில் எடுக்கப்ப டுகிறது, எந்த நேரம் சென்றடைகிறது, குறித்த வழித்தடத்தில் இயக்கப்படுகிதா, என்பதையெல்லாம் கண்காணிக்க முடியும். இதனால் முறை கேடுகளை தடுக்கலாம்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x