Published : 31 Dec 2021 08:45 AM
Last Updated : 31 Dec 2021 08:45 AM

கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்தோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்: முன்னாள் எம்எல்ஏவிடம் டிஐஜி விசாரணை

முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன்

விருதுநகர்

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்த 5 பேர் நீதிமன்றத்தின் பூட்டிய அறைக்குள் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனிடம் டிஐஜி விசாரணை நடத்தினார்.

முன்னாள் பால்வளத் துறை அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை 8 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில், ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானோரிடம் ரூ.73.66 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 6 பேர், ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக கும்பகோணத்தைச் சேர்ந்த 2 பேர் என 8 பேரை அழைத்து குற்றப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் விசாரித்தனர்.

இதற்கிடையே, சாத்தூர் முன்னாள் எம்எல்ஏவான ராஜவர்மனை மதுரையில் தனிப்படை போலீஸார் நேற்று பிடித்து, விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மேலும், ராஜேந்திரபாலாஜியின் நேர்முக உதவியாளர் சீனிவாச பெருமாள், மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் கிருஷ்ணராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலர் ராஜசிம்மன் ஆகியோரிடம் மதுரை சரக டிஐஜி காமினி, எஸ்பி மனோகர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, எஸ்பி அலுவலகம் முன்பு அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜேந்திரபாலாஜி மீது மோசடி புகார் அளித்த நபர்களில் முருகன், ரவீந்திரன், பரமசிவம், இளங்கோ மற்றும் மற்றொரு முருகன் ஆகியோரிடம் வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 2-வது நீதித்துறை நடுவர் பரம்வீர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார். அதையொட்டி, நீதிமன்றவளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x