Published : 31 Dec 2021 09:38 AM
Last Updated : 31 Dec 2021 09:38 AM
புதுச்சேரியில் வரும் 3-ம் தேதி முதல் சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு செய்ய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஜனவரி 10 முதல்பூஸ்டர் தடுப்பூசி போடப்படவுள்ளது.
இதுதொடர்பாக புதுவை சுகாதாரத்துறை இயக்குநர் ராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுவை சுகாதாரத்தறை வரும் 3-ம் தேதியில் இருந்து 15 வயது முதல் 18 வயது வரையுள்ள அனைத்து சிறார்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்பட உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவை ஆன்லைனில் அல்லது தடுப்பூசி செலுத்தும் மையங்களில் பதிவு செய்யலாம்.
இதற்காக ‘கோவின்’ செயலி மூலம் சுயபதிவு செய்யலாம் அல்லது தனிப்பட்ட மொபைல் எண் மூலம் புதிய கணக்கை உருவாக்கி பதியலாம்.
நேரடியாக தடுப்பூசி போட செல்கையில் அங்குள்ள ஊழியர் மூலம் பதியலாம். ஜனவரி 10-ம் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கும், கள பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். 2வது டோஸ் கொடுத்த நாளிலிருந்து 9 மாதங்களுக்குப் பிறகு அல்லது 39 வாரம் நிறைவடைந்தவர்கள் இந்த தடுப்பூசி போடலாம்.
‘கோவின்’ செயலி மூலம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட குறுஞ்செய்தி அனுப்பப்படும். பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட சான்றிதழும் இணைத்து தரப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT