Published : 30 Dec 2021 07:51 AM
Last Updated : 30 Dec 2021 07:51 AM

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான ‘அடல்’ தரவரிசை பட்டியல் வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த 13 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன

சென்னை

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு திறன், தொழில்முனைவோரை உருவாக்கும் திறன், ஸ்டார்ட் அப் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, ‘புதுமை கண்டுபிடிப்பில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை’ என்ற திட்டத்தை மத்தியகல்வித் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மூலம் செயல்படுத்தி வருகிறது.

கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைக்கு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை, புதுமை தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான சிறப்புக் கட்டமைப்பு வசதி போன்ற அம்சங்கள் தரவரிசைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

2021-ம் ஆண்டுக்கான தரவரிசைக்கு 1,438 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. வழக்கமாக, தொழில்நுட்பம் சார்ந்த கல்விநிறுவனங்களுக்கு மட்டுமே 5 பிரிவாக தரவரிசை வெளியிடப்படும். ஆனால், நடப்பாண்டு முதல் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள் 2 பிரிவாக இணைக்கப்பட்டு, மொத்தம் 7 பிரிவுகளாக தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இப்பட்டியலை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, சிறந்த மத்திய கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 3-வது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை மும்பை ஐஐடி, 3-வது இடத்தை டெல்லி ஐஐடி பிடித்தன.

மாநில பல்கலைக்கழக பிரிவில் பஞ்சாப் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலை. 5-வது இடத்தையும், சேலம் பெரியார்பல்கலைக்கழகம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் பிரிவில் 2-வது இடத்தில் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியும், 4-வது இடத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியும் உள்ளன. தனியார் நிகர்நிலை பல்கலை. பிரிவில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (4-வது இடம்), கலசலிங்கம் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் (6), வேலூர் விஐடி (8) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

தனியார் கல்லூரிப் பிரிவில் ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி2-வது இடத்தையும், ஸ்ரீகிருஷ்ணாபொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. அதேபோல, தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களின் பிரிவில் பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி 4-வது இடத்திலும், திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி 5-வது இடத்திலும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x