Published : 30 Dec 2021 09:00 AM
Last Updated : 30 Dec 2021 09:00 AM
வாகன ஓட்டுநர்களிடம் ‘கூகுள் பே’ மூலம் பணம் வசூலித்த காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை ஆனைகட்டி ஆதிவாசி மகளிர் வாழ்வாதார மையத்தில் உள்ள பெண்கள், வாழைநாரில் இருந்து யோகாசன பாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த பாய்களின் ஓரங்களை தைப்பதற்கு, சின்ன தடாகத்தைச் சேர்ந்த தையல்காரர் ஐயப்பன் என்பவரிடம் கொடுத்திருந்தனர். அவா், யோகாசன பாய்களை தைத்து, இருசக்கர வாகனத்தில் ஆனைகட்டிக்கு எடுத்துச் சென்றார். வழியில் மாங்கரை சோதனைச் சாவடியில் இருந்த தலைமைக் காவலர் முத்துசாமி, ஐயப்பன் கொண்டு வந்த ரூ.1,500 மதிப்புள்ள பாய்களுக்கு ரசீது இல்லை எனக்கூறி, அவற்றை பறிமுதல் செய்தார்.
இதுதொடர்பாக, வாழ்வாதார மையத்தின் நிர்வாகி சவுந்தர்யா, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி ராஜபாண்டியன் விசாரணை நடத்தினார். சோதனைச் சாவடியில் பணியிலிருந்த தடாகம் காவல் நிலைய காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில், காவலர்கள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களிடம் ‘கூகுள் பே’ மூலம் லஞ்சத் தொகை பெற்றதும் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை அறிக்கை காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யோகாசன பாய்களை பறிமுதல் செய்த தலைமைக் காவலர் முத்துசாமி ஆயுதப்படைக்கும், காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோர் கோவைப்புதூரில் உள்ள சிறப்புக்காவல் படைக்கும் பணி இடமாற்றம் செய்யப் பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT