Published : 30 Dec 2021 08:00 AM
Last Updated : 30 Dec 2021 08:00 AM

கொளத்தூரில் வீடு, வீடாகச் சென்று திமுக உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட முதல்வர்

சென்னை

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வீடு, வீடாகச் சென்று, திமுக உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

கொளத்தூர் எம்எல்ஏ-வான முதல்வர் ஸ்டாலின் நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க. நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமைத் தொடங்கி வைத்த முதல்வர், அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று திமுக உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டார். அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி, திமுகவில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, பலரும் திமுக உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து, அக்கட்சியில் இணைந்தனர்.

தொடர்ந்து, அண்மையில் மறைந்த கே.ஜி.ரவிச்சந்திரன் இல்லத்துக்கு சென்று, அவரது படத்துக்கு மலர்கள் தூவி, மரியாதை செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என்.நேரு, அமைச்சர் எ.வ.வேலு, வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி உடனிருந்தனர்.

பின்னர், ஜவஹர் நகரில் ரூ.2.52 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சி.விஜயராஜ் குமார் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x