Published : 30 Dec 2021 07:33 AM
Last Updated : 30 Dec 2021 07:33 AM
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 7 மாதங்கள் ஆகின்றன. தேர்தலுக்கு முன் கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து கோரிக்கைகளையும், குறைகளையும் மனுக்களாகப் பெற்று அவற்றை தீர்க்கவேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நமதுமாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
பட்டா கேட்டு பலர் மனுக்களை அளிக்கின்றனர். மெய்க்கால், நத்தம் புறம்போக்கு, களம் மேடு போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க இயலும். குளம், குட்டை போன்ற நீர்நிலை பகுதிகளில் வீடு கட்டி பட்டா கேட்பவர்களுக்கு வழங்க இயலாது. நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்றுகிறோம்.
இப்போது பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வை உடனடியாக தர முயற்சி மேற்கொள்ளப்படும். முதல்வர் ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்கள் ஆகின்றன. தேர்தலுக்கு முன் கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 18 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 10 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி, பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 51 பயனாளிகளுக்குப் பணி ஆணை ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT